கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு பிறப்பிப்பதற்கு ஒரு சில வாரங்களுக்கு முன் வெளியான திரைப்படம் ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’. தேசிங்கு பெரியசாமி இயக்கிய இந்தப் படத்தில் துல்கர் சல்மான், ரக்சன், ரிதுவர்மா உள்பட பலர் நடித்திருந்தார்கள்.
ஹைடெக் திருடர்களாக நாயகர்களும் நாயகிகளும் நடித்துள்ள இந்த திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்த படத்திற்கு பின் வேறு எந்த படமும் வெளியாகாமல் ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் ஓடிடி தளத்திலும் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இயக்குனர் தேசிய பெரியசாமி அவர்களுக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார். ரஜினியின் வாழ்த்தை கேட்டு இன்ப அதிர்ச்சி அடைந்த இயக்குனர் தேசிங்கு பெரியசாமி தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, ‘”சூப்பர்.. எக்ஸலண்ட்.. ஹா.. ஹா.. ஹா.. வாழ்த்துக்கள்.. பெரிய ஃபியூச்சர் இருக்கு உங்களுக்கு”. காலையில் இருந்து இதுமட்டும் தான் கேட்டுகிட்டு இருக்கு காத்துல. பறந்துட்டு இருக்கேன். அனைவருக்கும் நன்றி” என்று பதிவு செய்துள்ளார்.
இந்த டுவிட்டில் தேசிங்கு பெரியசாமி, ரஜினியின் பெயரை குறிப்பிடவில்லை என்றாலும் டுவீட்டின் இடையிடையே பாபா முத்திரையை அவர் குறிப்பிட்டுள்ளதால் ரஜினியிடம் இருந்து கிடைத்த பாராட்டு தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து ரஜினி ரசிகர்களும் இயக்குனர் தேசிங்கு பெரியசாமிக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.