செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமாஇயக்குனர்கள் துணைத் தலைவர் போட்டியிலிருந்து விலகிய திருப்பதி பிரதர்ஸ்

துணைத் தலைவர் போட்டியிலிருந்து விலகிய திருப்பதி பிரதர்ஸ்

1 minutes read
துணைத் தலைவர் போட்டியிலிருந்து விலகிய திருப்பதி பிரதர்ஸ்

தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் துணைத் தலைவர் போட்டியிலிருந்து திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தை சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் விலகியுள்ளார்.

தயாரிப்பாளர் சங்கத்துக்குத் தேர்தல் நடக்கவிருந்த சூழ்நிலையில், பல்வேறு பிரச்சினைகள் காரணமாக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு உயர் நீதிமன்றத் தலையீட்டின் பேரில் சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். விரைவில் தயாரிப்பாளர் சங்கத்துக்குத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்தச் சூழலில் பாரதிராஜா தலைமையில், ‘தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம்’ என்று புதிய சங்கமொன்றை உருவாக்கியுள்ளனர். இந்தப் புதிய சங்கம் உருவாக்கத்தைக் கைவிட வேண்டும் என்று தயாரிப்பாளர் தாணு, தேனாண்டாள் முரளி உள்ளிட்ட பலர் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், புதிய சங்கத்தைக் கைவிட யாருமே முன்வரவில்லை.

இதனிடையே, தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் ‘தயாரிப்பாளர் நலன் காக்கும் அணி’ என்ற பெயரில் தேனாண்டாள் முரளி தலைமையில் ஒரு அணி போட்டியிடுவதாக அறிவித்தது.

இதில் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட இருந்த திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் போட்டியிலிருந்து தற்போது விலகியுள்ளார்.

சுபாஷ் சந்திரபோஸ் அறிக்கை

இது தொடர்பாக சுபாஷ் சந்திரபோஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“நான் தயாரிப்பாளர் நலன் காக்கும் அணியில் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட இருந்தேன். ஆனால், அந்த அணியிலிருந்து விலகியுள்ளேன். அதற்கான தன்னிலை விளக்கமே இந்தக் கடிதம்.
நமது தயாரிப்பாளர்கள் சங்கம் ஒரு வலுவான தலைமையில் அமைய வேண்டுமெனக் கடந்த பத்து நாட்களாக இருபெரும் தலைவர்களை ஒன்றிணைக்கக் கடுமையான முயற்சிகள் எடுத்து வந்தோம். அந்த முயற்சிகள் எதுவுமே பலனளிக்காமல் போய்விடவே நானே சுயமாக எடுத்த முடிவுதான் இது.


அதற்கு ஒரே காரணம் 1351 தயாரிப்பாளர்களின் நலன் மட்டுமே அவர்களுடைய நலன் கருதியே நான் இந்த முடிவை எடுத்துள்ளேன். ஏற்கனவே நமது சங்கத்தை பிளவுபடுத்தப் பலர் நினைக்கும் இந்த சூழ்நிலையில் ஒரு வலுவான தலைமையை உருவாக்க வேண்டுமென்பதே என் போன்ற பல தயாரிப்பாளர்களின் எண்ணம்.
தொடர்ந்து தயாரிப்பாளர்களின் உரிமைக்காகப் போராடும் அனைத்து முயற்சிகளுக்கும் என் குரல் முதல் குரலாக ஒலிக்கும் என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மிக விரைவில் நாம் ஒரு மிகச் சிறந்த வலுவான தலைவரை உருவாக்கி நம் சங்கத்தை மீட்டெடுப்போம்” இவ்வாறு சுபாஷ் சந்திரபோஸ் தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More