கவிஞர், பாடலாசிரியர் மு.மேத்தா
அகவை 75
📖🖋
இன்று கவிஞர் மு.மேத்தா அவர்களின் பிறந்த நாள். தமிழில் புதுக்கவிதை படைத்த முன்னோடிகளில் சிறப்பான தனியிடம் பெற்றவர் என்ற தகமையைத் தாண்டி, ஈழப்பிரச்சனை குறித்து அன்று தொட்டு இன்றுவரை “தெளிவான” சிந்தனையோடு இயங்கும் மிகச்சில படைப்பாளிகளில் இவரும் ஒருவர் என்ற மேலதிக காரணத்தால் மு.மேத்தா அவர்களின் மீது எனக்கு இன்னும் ஒருபடி அதிகப்படியான நேசத்தை என்னுள் விதைத்து வைத்திருக்கிறேன். ஒருமுறை ஆனந்த விகடனில் இவர் எழுதிய சிறுகதை ஒன்றில் ஈழத்தமிழர் தரப்பின் நியாத்தை மறைபொருளாகச் சுட்டி எழுதியிருந்தார். அதற்கு முன்னரே ஈழத்தின் எண்பத்து மூன்றுகளின் அவலங்களை
“எல்லார்க்கும் விருந்தளித்து
ஏற்றம் பெற்ற எங்கள் இனம்
மரணதேவதையின் கோரப்பசிக்கு
விருந்து கொடுத்த பின்
அங்கே இப்போது அகதியானது”
போன்ற புதுக்கவிதைகள் தாங்கிய “திருவிழாவில் ஒரு தெருப்பாடகன்” என்ற தொகுதியில் கொடுத்திருப்பார்.
மு.மேத்தாவின் கவிதைகளை அவரின் “ஊர்வலம்” என்ற கவிதைத் தொகுதியே எனக்கு அறிமுகப்படுத்தியது. பின்னர் அவளுக்கு ஒரு கடிதம், நடந்த நாடகங்கள், முகத்துக்கு முகம், அவர்கள் வருகிறார்கள், கண்ணீர்ப்பூக்கள், வெளிச்சம் வெளியே இல்லை, நந்தவன நாட்கள், மு.மேத்தா முன்னுரைகள், மு.மேத்தா திரையிசைப்பாடல்கள் என்று வாங்கிக் குவித்தேன். பத்து வருடங்களுக்கு முன்னர் “காதலர் கீதங்கள்” என்ற வானொலித் தொகுப்பைத் தயாரித்து வழங்கியபோது வெறுமனே காதல் பாடல்களை மட்டும் சேர்த்து இட்டு நிரப்பாமல், பின்னணி இசையோடு அவரின் கவிதைத் தொகுதிகளில் இருந்து இரண்டடி வரிகளை எடுத்துக் கொடுத்துவிட்டு அதற்கேற்ற சூழலுக்குப் பொருந்துமாற்போலப் பாடல்களை இணைத்துக் கொடுத்தேன். அந்தப் படைப்பு நேயர்களைக் கவரவே பின்னர் தாங்களும் ஈரடிக் கவிதையோடு பாடல்களை இணைத்து வானொலிப் பிரதியாக அனுப்பி நிகழ்ச்சி தயாரிக்க வைத்தார்கள். கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் இந்த நிகழ்ச்சியைச் செய்தேன்.
மு.மேத்தாவின் புதுக்கவிதைகளை நடிகர் முரளியின் ஏக்கம் கலந்த தொனியில் அந்தக் காதலன் உள்ளக்கிடக்கையாகக் கொடுத்த இதயம் படம் சிறப்பானது.அந்த ஒலிப்பகிர்வுகளை இங்கே கொடுத்திருக்கிறேன்.
http://www.radiospathy.com/2011/02/www-www.html
கண்ணதாசன், வாலி, வைரமுத்து, முத்துலிங்கம் உள்ளிட்ட வெற்றிகரமான திரையிசைப்பாடலாசிரியர்கள் தம் திரையிசை அனுபவங்கள், பாடல் பிறந்த கதைகளை நூலுருவில் கொடுத்தது போன்றே மு.மேத்தா அவர்களும் தனது திரையிசைப்பாடல்கள் நூலில் தன் ஆரம்பகாலப் படங்களின் பாடல்கள் உருவான சுவையான பின்னணி மற்றும் காட்சிக்குப் பொருந்திய பாடல் வரிகளின் நியாயத்தை எல்லாம் நிறுவியிருப்பார். அத்தோடு பிரபல வானொலி, தொலைக்காட்சிப் படைப்பாளர் பி.ஹெச்.அப்துல்ஹமீத் அவர்கள், கலைஞர் தொலைக்காட்சியில் படைத்த இன்னிசை மழை என்ற நிகழ்ச்சியிலும் மு.மேத்தாவின் பாடல் அனுபவங்கள் சிறப்பாகப் பதிவாகியிருக்கின்றன.
“அனிச்ச மலர்” என்ற படத்தில் சங்கர்-கணேஷ் இசையில் அறிமுகமான மு.மேத்தாவுக்கு “ஆகாய கங்கை” என்ற இசைஞானி இளையராஜாவின் இசையில் மலர்ந்த படத்தின் “தேனருவியில் நனைந்திடும்” என்ற பாடலே அதிக புகழைக் கொடுத்தது. அந்தப் பாடல் வாய்ப்பை மு.மேத்தாவின் நண்பர் கமல்ஹாசனே பெற்றுக் கொடுக்கக் காரணமாக அமைந்தாராம்.
தொடர்ந்து
இதய கோவில் படத்தில் இடம்பெற்ற “யார் வீட்டில் ரோஜா பூப்பூத்ததோ” ,
நான் சிகப்பு மனிதன் திரைப்படத்தில் இடம்பிடித்த “பெண்மானே சங்கீதம் பாடிவா” ,
சொல்ல துடிக்குது மனசு படத்தில் வந்த “வாயக்கட்டி வயித்தக் கட்டி”
என் புருஷன் எனக்கு மட்டும் தான் படத்தில் வந்த “மனதில் ஒரே ஒரு பூப்பூத்தது”
கோடை மழை படத்தில் இடம்பெற்ற “பல பல பல பல குருவி”
போன்ற இனிமையான பாடல்களுக்குச் சொந்தக்காரர் மு.மேத்தா.
உதய கீதம் படத்தில் வந்த “பாடு நிலாவே தேன் கவிதை”
பாடலை நாயகி பாடுவது போல் ஆரம்பித்து நாயகனும் இணையும் வேளை நாயகனும் பாடு நிலாவே என்று பாடுவது பொருந்தாது ஏனென்றால் அவன் மூடிய சிறைக்குள் இருந்து அவளின் குரல்கேட்டுப் பாடுகிறானே எனவே “பாடும் நிலாவே” என்று மாற்றி பாடல் வரிகளில் நுணுக்கம் இருக்க வேண்டிய தேவையைச் சுட்டினாராம் இளையராஜா.
“ராஜராஜ சோழன் நான்” என்ற ரெட்டைவால் குருவி படப்பாடலே மு.மேத்தாவைப் பரவலாகக் கொண்டு சேர்த்த இனிய பாடல். அந்தப் பாடல் ஒன்றே போதும் மு.மேத்தாவின் கவிச்சிறப்பைத் திரையில் காட்ட.
வேலைக்காரன் படத்தின் படக்குழு இயக்குனர் எஸ்.பி.முத்துராமனுடன் வட நாட்டுக்குச் சென்றுவிட, அந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான கவிதாலயா சார்பில் இயக்குனர் கே.பாலசந்தரே ஒவ்வொரு பாடலுக்குமான கதைக்களனைச் சொல்லி மு.மேத்தாவை அனைத்துப் பாடல்களையும் எழுத வைத்து, இசைஞானி இளையராஜா இசையில் கொண்டுவந்தது ஒரு புதுமை. “தாஜ்மஹாலின் காதிலே ராம காதை கூறலாம்” என்று சமூக சிந்தனையை “வா வா வா கண்ணா வா” காதல் பாடலில் புகுத்தியிருப்பார் மு.மேத்தா.
தன் திரைப்படப் பாடல்கள் தொகுப்பில் கவிஞர் மு.மேத்தா இப்படிக் கூறுகின்றார்.
“தென்றல் வரும் தெரு”
என்று சிறையில் சில ராகங்கள் படத்துக்குப் பாடல் எழுதினேன்.
இப்பாடலின் தொடக்க வார்த்தைகளே பின்னர் நான் நண்பர்களுடன் சேர்ந்து தயாரித்த திரைப்படத்தின் பெயரானது. வேறு பெயர் வைக்கலாம் என்று நான் விரும்பினேன். பெயரை மாற்றக்கூடாது என்று மொத்த யுனிட்டே பிடிவாதம் பிடித்தது.
நான் தயாரித்த “தென்றல் வரும் தெரு” திரைப்படத்திலும் இதே பாடல் வரிகளை முதல் அடிகளாகக் கொண்டே பாடல் ஒன்று இருக்கின்றது. அப்பாடலின் வரிகளை மாற்றலாமே என்று இளையராஜா கேட்டார். கதைச் சூழலுக்காக இந்த வரி கட்டாயம் வேண்டும் என்று வேண்டினோம்.
இரண்டு பாடல்களுக்கும் முதல் வரிகள் இரண்டும் ஒன்றே. இசை வேறு, இரண்டுக்கும் ஒரே இசையமைப்பாளர் இளையராஜா. “தென்றல் வரும் தெரு அது நீ தானே” என்ற பாடல் வரிகளை முதல் அடியாகக் கொண்டு “சிறையில் சில ராகங்கள்” திரைப்படம் 1990 இல் வெளியானது. அது நடிகர் முரளி, பல்லவி நடிப்பில் வெளியானது.அடிகள் பயன்பட்ட மு.மேத்தாவின் தயாரிப்பில் வந்த “தென்றல் வரும் தெரு” ரமேஷ் அரவிந்த், கஸ்தூரி நடிப்பில் வெளியானது. நான்கு ஆண்டுகள் கழித்து 1994 இல் தான் படம் வந்தது.
இந்தப் படத்திலும் தென்றல் வரும் தெரு என்று இன்னொரு பாடலை எழுதியிருப்பார் மு.மேத்தா.
இசைஞானி இளையராஜாவுடன் மு.மேத்தா இணைந்த மேலும் சில பாடல்கள்
1.ஒரு ஆலம்பூவு – புண்ணியவதி
2. சிட்டு பறக்குது – நிலவே முகம் காட்டு
3. நிக்கட்டுமா போகட்டுமா – பெரிய வீட்டுப் பண்ணக்காரன்
4. வாயைக் கட்டி வயித்தைக் கட்டி – சொல்லத் துடிக்குது மனசு
5. மயில் போல பொண்ணு – பாரதி
6. பொன்மானைத் தேடுதே – ஓ மானே மானே
7. மலரே மலரே உல்லாசம் – உன் கண்ணில் நீர் வழிந்தால்
8. கற்பூர பொம்மை ஒன்று – கேளடி கண்மணி
9. வாழை மரம் கட்டி வாழ நினைத்ததென்ன – இசை பாடும் தென்றல்
10. ஆனந்தம் பொங்கிடப் பொங்கிட – சிறைப்பறவை
11. நான் ஒன்று கேட்டால் – இளையராகம்
12. ஒரு பூவனக் குயில் – மரகத வீணை
13. ஒண்ணுக் கொண்ணு – நந்தலாலா
பிற இசையமைப்பாளர்களுடன் மு.மேத்தா
1. தலைவா நீ இங்கு வர வேண்டும்
இசை : மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
படம் : மூக்கணாங் கயிறு
2. காலம் பொறந்திருச்சு சின்ன மயிலே
இசை : சந்திரபோஸ்
படம் : மைக்கேல் ராஜ்
3. தென்ன மரத் தோப்புக்குள்ள
இசை : சந்திரபோஸ்
படம் : மைக்கேல் ராஜ்
4. யார் போகும் வழியில்
இசை : ஆனந்த் சங்கர்
படம் : யாரோ எழுதிய கவிதை
5. ஆகா ஆயிரம் சுகம்
இசை : ஆனந்த் சங்கர்
படம் : யாரோ எழுதிய கவிதை
6. போகாதே அடி பொன் மானே
இசை : தேவா
படம் : மைந்தன்
7. நந்தவனம் ஆனதம்மா
இசை : தேவா
படம் : மைந்தன்
8. தேடும் என் காதல்
இசை : சந்திரபோஸ்
படம் : ஒரு மலரின் பயணம்
இசைஞானி இளையராஜாவுடன் இணைந்து பணிபுரியும் பாடலாசிரியர்களில் வாலிக்குப் பின்னர் இன்னமும் தொடர்ந்து சேர்ந்திசையாகப் பயணிக்க்கும் கவிஞர் மு.மேத்தாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
நன்றி : உசாவ உதவிய இன்னிசை மழை காணொளி மற்றும் மு.மேத்தா திரைப்படப் பாடல்கள் நூல்
கானா பிரபா