தமிழில் நயன்தாராவுடன் இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்து பிரபலமான அனுராக் காஷ்யப் இந்தி திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கிறார். இவர் மீது தமிழில் தேரோடும் வீதியிலே படத்தில் கதாநாயகியாக வந்த பிரபல நடிகை பாயல் கோஷ் பாலியல் புகார் தெரிவித்து இருந்தார்.
“அனுராக் காஷ்யப் வீட்டுக்கு பட வாய்ப்பு கேட்டு சென்றபோது தன்னிடம் தகாத முறையில் நடந்தார். 200-க்கும் மேற்பட்ட பெண்களுடன் படுக்கையை பகிர்ந்து இருப்பதாக பெருமையாகவும் தெரிவித்தார்” என்றார். மும்பை ஓஷிவாரா போலீசிலும் புகார் அளித்தார். அனுராக் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அனுராக்கை கைது செய்ய வேண்டும் என்று கங்கனா ரணாவத் வற்புறுத்தினார்.
இந்த நிலையில் புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் தாமதம் செய்வதாக பாயல்கோஷ் கண்டித்துள்ளார். டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “அனுராக் காஷ்யப் மீது நான் புகார் கொடுத்து 4 மாதங்கள் ஆகிவிட்டன. அவருக்கு எதிரான ஆதாரங்களையும் கொடுத்து விட்டேன். ஆனால் போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை. நான் இறந்துபோனால்தான் நடவடிக்கை எடுப்பீர்களா” என்று கூறியுள்ளார்.