மோகன்லால், கீர்த்தி சுரேஷ், மஞ்சு வாரியர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
16-ம் நூற்றாண்டில் கேரளாவில் வாழ்ந்த கடற்படை தலைவர்கள் குஞ்சலி மரைக்காயர் என்று அழைக்கப்பட்டனர். இவர்களில் 4-வது குஞ்சலி மரைக்காயர் வீர தீரம் நிறைந்தவராக போற்றப்பட்டார். அவரது வாழ்க்கையை மையமாக வைத்து ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ என்ற படம் தயாராகி உள்ளது. ரூ.100 கோடி செலவில் தயாராகியுள்ள இப்படத்தை பிரியதர்ஷன் இயக்கியுள்ளார்.
இதில் குஞ்சலி மரைக்காயர் வேடத்தில் மோகன்லால் நடித்துள்ளார். நடிகைகள் கீர்த்தி சுரேஷும், மஞ்சு வாரியரும் நாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் அர்ஜுன், சுனில் ஷெட்டி, அசோக் செல்வன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் தயாராகி உள்ளது.
இப்படத்தை கடந்தாண்டு மார்ச் மாதமே ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர். இருப்பினும் கொரோனா லாக்டவுன் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. இந்நிலையில், இப்படத்தை வருகிற மார்ச் 26-ந் தேதி தியேட்டர்களில் வெளியிட உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.