நடிகை ராஷ்மிகா மந்தனா, தற்போது பாலிவுட்டில் பிசியாக நடித்து வருவதால், அவர் மும்பையில் வீடு ஒன்றை வாங்கி உள்ளாராம்.
கன்னடத்தில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான கிரிக்பார்ட்டி படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. இதையடுத்து தெலுங்கில் கீதா கோவிந்தம் படம் மூலம் ரசிகர்களை கவர்ந்த அவர், குறுகிய காலத்தில் நானி, மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தனது மார்க்கெட்டை உயர்த்திக் கொண்டார். தெலுங்கு படங்களில் பிசியானதால் ஐதராபாத்தில் சொந்தமாக வீடு வாங்கிய ராஷ்மிகா, அங்கு தங்கி நடித்து வந்தார்.
இந்நிலையில், நடிகை ராஷ்மிகாவுக்கு தற்போது பாலிவுட் பட வாய்ப்புகளும் குவிந்து வருகின்றன. ஏற்கனவே சித்தார்த் மல்ஹோத்ராவுடன் மிஷன் மஜ்னு, அமிதாப்பச்சனுடன் டெட்லி ஆகிய இரண்டு இந்தி படங்களில் நடித்து வரும் அவருக்கு, மேலும் சில இந்தி பட வாய்ப்புகளும் வருகிறதாம். இதனை கருத்தில் கொண்டு மும்பையில் ஒரு வீடு வாங்கி உள்ளாராம்.
நடிகை ராஷ்மிகா, தமிழில் கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள சுல்தான் படம் மூலம் அறிமுகமாக உள்ளார். இதுதவிர நெல்சன் இயக்கத்தில் உருவாகும் தளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது. இது உறுதியானால், அவர் சென்னையிலும் வீடு வாங்கி விடுவார் போல் தெரிகிறது.