சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் டாக்டர். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் ‘டான்’ மற்றும் ‘அயலான்’ படத்தில் நடித்து முடித்து இறுதிக்கட்ட பணிகள் நடந்துவருகிறது. இப்படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுத்தாக தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனர் அனுதீப் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து சுரேஷ் புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு தற்காலிகமாக ‘எஸ்.கே 20’ என பெயரிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ‘எஸ்.கே 20’ படத்தின் படப்பிடிப்பு இன்று(10.2.2022) சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பூஜையுடன் தொடங்கியுள்ளது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் பூஜையில் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதில் சிவகார்த்திகேயன், சத்யராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். 2013-இல் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் வெளியான ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் நடிகர் சத்யராஜ் மற்றும் சிவகார்த்திகேயன் இணைந்து நடித்திருந்தனர். அதன் பின் நீண்ட இடைவேளைக்கு பிறகு இந்த கூட்டணி இணைவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.