ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இந்தி படத்தை இயக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார். அவர் அவ்வப்போது இணையத்தின் வழியாக ரசிகர்களுடன் உரையாடுவார். ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு அவர் கூறியதாவது, ‘இந்தியில் நான் ‘ஓ சாத்தி சால்’ படத்தை இயக்குவதன் மூலம், அங்கு இயக்குனராக களமிறங்கி இருக்கிறேன். இது ஒரு மிகச்சிறந்த, உண்மையான காதல் கதை. நான் இடையே ஒரு இடைவெளி விட்டுவிட்டேன். என் மகன்களிடம் நேரம் செல வழிக்கவே அப்படி செய்தேன். இப்போது அவர்கள் வளர்ந்து விட்டார்கள்.
எனக்கு அப்போதே இந்தி படங்களை இயக்க வாய்ப்பு வந்தது. ஆனால் இப்போதைக்கு வாய்ப்பில்லை என்றே தவிர்த்து வந்தேன். இப்போது நான் மீண்டும் சினிமா இயக்கபோகிறேன். என் மகன்கள் வளர்ந்துவிட்டார்கள் எல்லோரும் அப்பாவை வைத்து எப்போது படம் இயக்குவீர்கள் என்று கேட்கிறார்கள். எனக்கு அந்த எண்ணம் கிடையாது. நான் அவரது ரசிகையாக இருந்தாலே போதும் என்று அதை ரசித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் யார்தான் வேண்டாமென்று சொல்வார்கள் என்றார்.