‘குலதெய்வம் தான் குலம் காக்கும் என்பார்கள். எங்களுடைய ‘செல்ஃபி’ படத்திற்கு தயாரிப்பாளர் தாணு சார் தான் குலசாமி’ என செல்ஃபி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகியிருக்கும் நடிகர் டி. ஜி. குணாநிதி தெரிவித்திருக்கிறார்.
அறிமுக இயக்குநர் மதிமாறன் இயக்கத்தில், ‘இசை அசுரன்’ ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடித்து வெளியான ‘செல்ஃபி’ திரைப்படத்தை வெற்றிபெற செய்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது.
இவ்விழாவில் தயாரிப்பாளர் தாணு, செல்ஃபி பட தயாரிப்பாளர் சபரிஷ், நடிகர்கள் டி.ஜி. குணாநிதி, சுப்ரமணிய சிவா, ஜீ. வி. பிரகாஷ் குமார், வர்ஷா பொல்லம்மா உள்ளிட்ட பலர் பங்குபற்றினர்.
இவ்விழாவில் ‘செல்ஃபி’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகியிருக்கும் டி. ஜி. குணாநிதி பேசுகையில், ” இயக்குநர் மதிமாறன் ஒரு சகோதரனை போல் எம்மிடம் பழகி, இந்த திரைப்படத்தில் எம்மை ஒரு இஸ்லாமிய குடும்ப பின்னணி கொண்ட இளைஞனாக மாற்றம் பெறுவதற்கு நிறைய விடயங்களை கற்பித்தார்.
இந்த படத்திற்காக உழைத்த அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். குலதெய்வம் தான் குலம் காக்கும் என்பார்கள்.
இந்தப் படத்திற்கு தாணு சார் தான் குலசாமி. ஜீ. வி. பிரகாஷ் சார் என்னை எப்போதும் உற்சாகப்படுத்திக் கொண்டே இருப்பார்.” என்றார்.
படம் வெளியாகி ஒரு மாதத்திற்கு பின்னர் வெற்றி விழா கொண்டாடுவதன் பின்னணி குறித்து விரிவாக தகவல்கள் வெளியாகவில்லை என்றாலும், தமிழ் திரை உலகில் இதுபோன்ற வெற்றி விழாக்கள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என திரையுலகினர் தெரிவிக்கிறார்கள்.