நடிகர் அருள்நிதி நடிப்பில் தயாராகவிருக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்க ‘சார்பட்டா பரம்பரை’ பட புகழ் நடிகை துஷாரா விஜயன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
‘ராட்சசி’ படத்தை இயக்கிய இயக்குநர் கௌதம் ராஜ் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத புதிய படத்தில் கதையின் நாயகனாக அருள்நிதி நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக ‘ சார்பட்டா பரம்பரை’ பட புகழ் நடிகை துஷாரா விஜயன் நடிக்கிறார். இவர்களுடன் நடிகர் சந்தோஷ் பிரதாப், நடிகர் விஜய் முருகன், பூ ராம் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். டி இமான் இசை அமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது.
படத்தை பற்றி இயக்குநர் பேசுகையில், ” அருள்நிதி வித்தியாசமான தோற்றத்தில் கிராமிய பின்னணியிலான எக்சன் என்டர்டெய்னர் ஜேனரில் தயாராகும் படத்தில் நடிக்கிறார். இதில் வங்கியில் பணியாற்றும் ஊழியராக நடிகை துஷாரா விஜயன் நடிக்கிறார். முக்கியமான வேடத்தில் நடிகர் சந்தோஷ் பிரதாப் நடிக்கிறார். கலை இயக்குநராக பணியாற்றி வரும் விஜய் முருகன் இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு ஜூலையில் தொடங்குகிறது.” என்றார்.
அருள்நிதி நடிப்பில் ‘தேஜாவு’, ‘டி ப்ளாக்’, ‘டைரி’ ஆகிய படங்களின் பணிகள் நிறைவடைந்து விரைவில் வெளியீட்டுக்கு தயாராகயிருக்கிறது. இந்தப்படத்தில் அருள்நிதியின் மீசை வித்தியாசமான கிராமவாசி தோற்றத்தில் இருப்பதால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.