தமிழ் திரை உலகின் தவிர்க்க முடியாத குணசித்திர நடிகையும், கொமடி நடிகையுமான கோவை சரளா நடிப்பில் தயாராகி இருக்கும் ‘செம்பி’ படத்தின் முன்னோட்டத்தை பார்த்து வியந்த ‘உலகநாயகன்’ கமலஹாசன் கோவை சரளாவை ‘நடிப்பு ராட்சசி’ என பாராட்டியுள்ளார்.
‘உலகநாயகன்’ கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி வசூலில் சாதனை படைத்து வரும் ‘விக்ரம்’ படத்தை பாராட்டும் வகையில், ‘செம்பி’ படக்குழுவினர் உலக நாயகன் கமலஹாசனை அண்மையில் சந்தித்தனர். அதன்போது ‘செம்பி’ படத்தின் முன்னோட்டம் அவருக்கு திரையிடப்பட்டது. முன்னோட்டத்தை பார்த்து வியந்த கமலஹாசன் படக்குழுவினரை பாராட்டியதுடன், படத்தில் கதையின் நாயகியாக நடித்திருக்கும் ‘கோவை சரளா நடிப்பு ராட்சசி’ என தெரிவித்தார்.
இதன்போது படத்தின் தயாரிப்பாளர்கள் ஆடிட்டர் அக்பர் அலி, ட்ரைடண்ட் ஆர். ரவீந்திரன், நடிகை ரியா நடிகை கோவை சரளா இயக்குநர் பிரபு சாலமன் நடிகர் அஸ்வின் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
உலக நாயகனின் கமலஹாசனின் பாராட்டைப் பெற்ற ‘செம்பி’ திரைப்படத்தை வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டு வருவதாகவும், இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனிடையே அண்மையில் வெளியான ‘செம்பி’ படத்தின் முன்னோட்டம் மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.