கதைக்களம்
ஆர்.ஜே.பாலாஜி மற்றும் என்.ஜே.சரவணன் இயக்கத்தில் வெளியாகியுள்ள வீட்ல விசேஷம் படத்தின் விமர்சனம்விமர்சனம்
வீட்ல விசேஷம் விமர்சனம்
ரயில்வே ஊழியராக இருக்கும் சத்யராஜ், மனைவி ஊர்வசி மகன்கள் ஆர்.ஜே.பாலாஜி, விஸ்வேஷ் மற்றும் தாயுடன் வாழ்ந்து வருகிறார். இதில் ஆசிரியராக பணிபுரியும் ஆர் ஜே பாலாஜி, பள்ளியின் நிறுவனர் மகளான அபர்ணா பாலமுரளி காதலித்து வருகிறார்.
இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்யும் நிலையில், ஆர்.ஜே.பாலாஜி, தனது தாய் ஊர்வசி கர்ப்பமாக இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைகிறார். ஊர்வசியின் கர்ப்பத்தால் ஆர்.ஜே.பாலாஜி காதலுக்கு விரிசல் ஏற்படுகிறது.
இறுதியில் தாயின் கர்ப்பத்தை ஆர்.ஜே.பாலாஜி ஏற்றுக் கொண்டாரா? காதலி அபர்ணா பாலமுரளியுடன் இணைந்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஆர்.ஜே.பாலாஜி, தனக்கே உரிய பாணியில் காமெடி, கிண்டல் கலந்த நடிப்பை கொடுத்திருக்கிறார். குறிப்பாக இப்படத்தில் சென்டிமென்ட் காட்சிகளில் அதிக கவனத்தை ஈர்த்து இருக்கிறார். பெற்றோர்கள் மீது கோபப்படுவது, பாசத்தை புரிந்து கொள்வது என நடிப்பில் பளிச்சிடுகிறார். நாயகியாக நடித்திருக்கும் அபர்ணா பாலமுரளி கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்.
படத்திற்கு பெரிய பலம் சத்யராஜ் மற்றும் ஊர்வசி. பல காட்சிகளில் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். தன் அம்மாவை சமாளிப்பது, மனைவியை அரவணைப்பது என கிடைக்கும் இடங்களில் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார் சத்யராஜ். ஊர்வசியின் நடிப்புக்கு பெரிய கைத்தட்டல் கொடுக்கலாம். கடினமான காட்சிகளில் கூட சாதாரணமாக நடித்துவிட்டு சென்றிருக்கிறார்.
50 வயதில் கர்ப்பம் அடைவது, வேற நோக்கத்தில் பார்க்கபட்டாலும், அதில் இருக்கும் காதல், பாசம், உணர்வு என அனைத்தும் கலந்து சொல்லி இருக்கிறார்கள் இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி மற்றும் என்.ஜே.சரவணன். பார்ப்பவர்களுக்கு முகம் சுளிக்காமல் அனைத்து தரப்பினரும் ரசிக்கும்படி திரைக்கதை அமைத்ததற்கு பாராட்டுகள். கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார்கள்.
கார்த்திக் முத்துக்குமாரின் ஒளிப்பதிவு சிறப்பு. அதேபோல், கிரிஷ் கோபாலகிருஷ்ணனின் இசையில் உருவான பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்.
மொத்தத்தில் ‘வீட்ல விசேஷம்’ வாழ்த்தலாம்.