தயாரிப்பு : ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட்
நடிகர்கள் : பிரதீப் ரங்கநாதன், இவானா, சத்யராஜ் மற்றும் பலர்.
இயக்கம் : பிரதீப் ரங்கநாதன்
மதிப்பீடு : 2.5/ 5
நடுத்தர வகுப்பை சேர்ந்த நாயகன் உத்தமன் பிரதீப்பும், உயர் நடுத்தர வகுப்பை சேர்ந்த நிகிதாவும் காதலிக்கிறார்கள். இவர்களின் காதல் நிகிதாவின் தந்தையான வேணு சாஸ்திரிக்கு தெரிய வருகிறது. இவர் காதலர்களுக்கு புது மாதிரியான நிபந்தனையை விதிக்கிறார். அதாவது நாயகனின் செல்போனை நாயகியும், நாயகியின் செல்போனை நாயகனும் 24 மணித் தியாலம் வரை வைத்திருக்க வேண்டும். அதன் பிறகு மீண்டும் என்னைச் சந்திக்க வேண்டும்.
அதன் பிறகும் உங்கள் மீதான அன்பு அதே நிலையில் தொடர்ந்தால்… உங்களது திருமணத்திற்கு சம்மதிக்கிறேன். ஆனால் ஒரே நாளில் நிலைமை தலைகீழாக மாறினால், நான் சொல்வதை இருவரும் கேட்க வேண்டும் என்கிறார். முதலில் நாயகனுக்கும், நாயகிக்கும் இந்த விடயம் எளிதாக தோன்றுகிறது. ஆனால் மணித்தியாலங்கள் செல்ல செல்ல இருவருக்கும் அவர்கள் மீது அவநம்பிக்கை ஏற்படுகிறது. இதிலிருந்து இருவரும் மீன்டார்களா? அல்லது சிக்கிக் கொண்டு பெற்றோர்களின் கட்டுப்பாட்டிற்கு ஒப்புக் கொண்டார்களா? என்பது தான் படத்தின் கதை.
இன்றைய திகதியில் மூணு மாத பச்சிளங் குழந்தை முதல் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்தவர்கள் வரை தங்களது ஆறாவது விரலாக செல்போன் இருக்கிறது. அதிலும் வளரிளம் பருவம் மற்றும் இளம் வயதினர்களிடத்தில் செல்போன் இருந்தால், அவர்கள் சமூக வலைதள மோகத்தில் மூழ்கி விடுகிறார்கள். மேலும் செல்போன் என்பது தொடர்பு நிலை கருவி என்பதை கடந்து, கையடக்க கணினியாகவும் செயல்படுவதால், அதில் ஏராளமான ஆபாச குப்பைகளை சேமித்து வைத்திருக்கிறார்கள். இந்த இலத்திரனியல் கருவி ஒவ்வொரு இளைஞர் மற்றும் இளைஞிகளின் குணாதிசயங்களை வெளி உலகுக்கு அப்பட்டமாக எடுத்துரைக்கும் அத்தாட்சியாக திகழ்கிறது.
மேலும் இன்றைய சூழலில் குற்றங்களை குறைப்பதற்காக மக்களின் சமூகவியல் வாழ்க்கை, கண்காணிப்பு கமெராக்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருப்பதைப் போல்.., ஒவ்வொரு நபர்களின் அந்தரங்க வாழ்க்கையும் இத்தகைய கண்காணிப்பு கமெராக்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருக்கிறது. மேலும் இளமையில் ஏற்படும் கவனச் சிதறல்களை காட்டிக் கொடுக்கும் கருவியாகவும் இவை திகழ்வதால், காதலுக்கு தொடக்க நிலையில் நேர் நிலையான ஆதரவை வழங்கும் இந்த செல்போன், காதலில் பிரிவு ஏற்பட்டால்… எதிர் நிலையான தாக்கத்தை ஏற்படுத்தும் ஆதார கருவியாகவும் மாற்றம் பெறுகிறது. இதனால் உறவுகளிலும், உறவு மேலாண்மையிலும் தடுமாற்றம் ஏற்படுவதை ‘லவ் டுடே’ நேர்த்தியாக எடுத்துரைத்திருக்கிறது. இதனால் இந்தப் படத்திற்கு இளைய தலைமுறையின் ஆதரவு அதிகமாக கிடைக்கும்.
‘கோமாளி’ படத்தை இயக்கிய இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் கதை எழுதி, கதையின் நாயகனாகவும் நடித்திருக்கிறார். அவரது திரை தோன்றல் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது. நாயகி நிகிதாவாக நடித்திருக்கும் நடிகை இவானாவின் நடிப்பு பாராட்டுக்குரியது. நுட்பமான உணர்வுகளை வெளிப்படுத்தி அனைத்து தரப்பு ரசிகர்களின் மனதையும் வசீகரிக்கிறார். வேணு சாஸ்திரியாக நடித்திருக்கும் சத்யராஜ், சரஸ்வதி ஆக நடித்திருக்கும் ராதிகா சரத்குமார் தங்களின் எல்லைக்குள் நின்று வழக்கமான நடிப்பை வழங்கி இருக்கிறார்கள்.
கதை, வசனம், காட்சி மொழி, காட்சி கோணங்கள், பின்னணி இசை என அனைத்தும் படமாளிகையில் ரசிகர்களுடன் ரசிக்கும் வகையில் அமைந்திருக்கிறது.
யோகி பாபு – ரவீனா ரவி இந்த ஜோடியின் செல்போன் சஸ்பென்ஸ் ரசனையாகவும், எதிர்பாராத திருப்பத்துடனும் அமைந்திருக்கிறது. இதற்காக இயக்குநருக்கு ஸ்பெஷல் பாராட்டுகள்.
நாயகனும் நாயகியும் தங்களது செல்போன்களை பரிமாற்றம் செய்து கொள்வதால் இருவரது இறந்த காலமும் இருவருக்கும் தெரியவரும் போது அவர்களின் தவிப்பும்.. தர்ம சங்கடமும்.. ரசிகர்கள் உணர்ந்து கொள்ள வேண்டிய உணர்வு.
இந்தப் படத்தைப் பார்த்த பிறகு காதலர்கள் தங்களின் செல்போன்களை பரிமாற்றம் செய்து கொள்கிறார்களோ.. இல்லையோ.. நிச்சயம் நம்பிக்கையை வளர்த்துக் கொள்வார்கள் அல்லது செல்போன் பயன்பாட்டை கட்டுப்படுத்திக் கொள்வார்கள். இவை இரண்டும் இயக்குநர் உணர்த்த விரும்பிய சமூக விளைவுகள் என்பதால், ‘லவ் டுடே’ படத்தின் இயக்குநரை தாராளமாக கை வலிக்க கைகுலுக்கி பாராட்டலாம்.
லவ் டுடே – பெஸ்ட் கேரக்டர் ஆப்ஸ்
நன்றி – வீரகேசரி