புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இரட்டை வேடங்களில் நடித்து 1974 ஆம் ஆண்டில் வெளியான ‘சிரித்து வாழ வேண்டும்’ எனும் திரைப்படம் நவீன தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு, மீண்டும் அவரது பிறந்த நாளான ஜனவரி மாதம் 17 ஆம் திகதியன்று வெளியாகிறது என படக் குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.
புரட்சித்தலைவர் எம்ஜிஆர், லதா, எம். என். நம்பியார், தேங்காய் சீனிவாசன், மனோகர், ஐசரி வேலன், எல். காஞ்சனா உள்ளிட்ட பலர் நடித்து 1974 ஆம் ஆண்டில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ‘சிரித்து வாழ வேண்டும்’. ‘உலகம் என்னும்..’, ‘ஒன்றே சொல்வான் நன்றே செய்வான்..’, ‘எண்ணத்தில் நலமிருந்தால்..’ போன்ற வெற்றி பெற்ற பாடல்கள் இடம்பெற்ற இந்த திரைப்படம், மீண்டும் டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்டு வெளியாகிறது. புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் பிறந்த நாளான ஜனவரி மாதம் 17ஆம் திகதியன்று இந்த திரைப்படம் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
புரட்சித் தலைவர் எம்ஜிஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன்.. ஆகியோர் நடித்த படங்கள் மீண்டும் டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்டு வெளியிடப்படுவது தமிழ் திரையுலகில் தொடர்கதையாகி இருக்கிறது. தற்போதைய படைப்பாளிகள், வீரியமிக்க கதைகளை உருவாக்குவதை விட வேறு மொழியில் வெளியான திரைப்படங்களை கொப்பியடித்து படங்களை உருவாக்கி வெளியிடுகிறார்கள். இதனால் ரசிகர்களிடத்தில் பழைய படங்களுக்கு மவுசு அதிகரித்து வருகிறது என திரையுலக வணிகர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.