ஹொலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த வாரத்தில் வெளியான ‘அவதார்- தி வே ஆஃப் வோட்டர்’ எனும் திரைப்படம் இந்திய திரையுலகில் எதிர்பார்ப்புகளை முறியடித்து புதிய வசூல் சாதனையை படைத்து வருகிறது என திரையுலக வணிகர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
ஹொலிவுட் திரைப்படங்கள் உலகளவில் வெளியாகி வசூல் சாதனைகள் படைப்பது என்பது வாடிக்கை. அதிலும் ‘அவதார்’ போன்ற தரமான கிறாபிக்ஸ் காட்சிகளைக் கொண்ட திரைப்படங்கள் வசூலில் சாதனை படைப்பது எதிர்பார்த்தது தான். ஆனால் உலகம் முழுவதும் 160 மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட ‘அவதார் – தி வே ஆஃப் வோட்டர்’ வெளியான மூன்று நாட்களில் இந்தியாவில் மட்டும் 160 கோடி ரூபாய் வசூல் செய்து புதிய சாதனையை படைத்திருக்கிறது.
அவதார் -தி வே ஆஃப் வோட்டர்’ படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வெளியானாலும், தொடர்ந்து வசூல் சாதனையை படைக்கும் என்றும், இந்த திரைப்படம் உலகளவில் வசூலில் புதிய சாதனையைப் படைக்கும் என்றும் திரையுலக வணிகர்கள் அவதானிக்கிறார்கள்.