பிரபல பின்னணி பாடகர் மனோவுக்கு இசை ஞானி இளையராஜா கடும் எச்சரிக்கை விடுத்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
பிரபல பின்னணி பாடகர் மனோ சிறிய இடைவெளிக்குப் பிறகு ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும்’ எனும் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். அவரது நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்து வருகிறது.
இந்நிலையில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘சிங்காரவேலன்’ எனும் திரைப்படத்துக்கு பிறகு ஏன் நடிக்கவில்லை என பாடகர் மனோவிடம் கேட்டபோது, ” கமல்ஹாசனின் ‘சிங்காரவேலன்’ படத்துக்காக கொடைக்கானலில் படப்பிடிப்பில் பங்குபற்றினேன்.
படப்பிடிப்பு நிறைவடைந்த பிறகு இசைஞானி இளையராஜாவை சந்தித்தேன். அப்போது அவர், ‘நீ மீண்டும் நடிப்பதாக இருந்தால் உனக்காக பாட்டு காத்திருக்காது. தொடர்ந்து நடிப்பதா, வேண்டாமா என்பதனை நீயே முடிவு செய்து கொள்’ என்றார்.
அன்றைக்கு அவருடைய இந்த அன்பான எச்சரிக்கை, எம்மை நடிப்பதிலிருந்து முழுமையாக விலக வைத்தது. அந்தத் தருணத்தில் கிட்டத்தட்ட 15க்கும் மேற்பட்ட பாடல்கள் எனக்காக காத்திருந்தது.
இந்த விடயத்தில் இளையராஜா எனக்காக காத்திருந்தது, என்னை யோசிக்க வைத்தது. இதன் காரணமாக தொடர்ந்து திரைப்படத்தில் நடிப்பதில் கவனம் செல்லவில்லை. மேலும், எந்த பாடல்கள் வெற்றி பெறும் என்று உறுதியாக அவதானிக்க இயலாது. அதனால் இசைஞானி சொல்வதை வேதவாக்காக எடுத்துக் கொண்டேன்.
கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு இயக்குநர் விக்னேஷ் ஷா என்னை தொடர்பு கொண்டு ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும்’ படத்தின் கதையை தொலைபேசியில் விவரித்தார்.
அப்போது நடிக்க வேண்டும் என்றால், என்னுடைய பின்னணி பாடும் பணிக்கோ மேடை கச்சேரி, இசை நிகழ்ச்சிக்கோ எந்த இடையூறும் வராமல் பார்த்துக்கொண்டால், இதற்கு சமரசம் செய்துகொண்டால் நடிக்கிறேன் என்று தெரிவித்தேன். அவர்களும் ஒப்புக்கொண்டதால் இந்த படத்தில் நடித்தேன்” என பதிலளித்தார் பாடகர் மனோ.
பின்னணி பாடகர் மனோ தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஒடியா, பெங்காலி, போஜ்புரி, கொங்கணி, துலு.. என பல மொழிகளில் இதுவரை 26 ஆயிரம் பாடல்களை பாடி இருக்கிறார் என்பதும், ‘சிங்காரவேலன்’ எனும் படத்துக்கு பிறகு 30 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’ எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார் என்பதும் கவனிக்கத்தக்கது.