இசையமைப்பாளரும், நகைச்சுவை நடிகருமான பிரேம்ஜி அமரன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘சத்திய சோதனை’ திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இயக்குநர்கள் வெற்றிமாறன், ராஜமுருகன், நடிகரும், இயக்குநருமான சமுத்திரக்கனி, முன்னணி படத் தொகுப்பாளரான கே. எல். பிரவீண் ஆகியோர் தங்களது இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
‘ஒரு கிடாயின் கருணை மனு’ எனும் படத்தை இயக்கிய இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘சத்திய சோதனை’. இதில் பிரேம்ஜி அமரன் முதன்மையான வேடத்தில் நடிக்க, அவருக்கு இணையான வேடத்தில் நடிகை ஸ்வயம் சித்தா நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகை ரேஷ்மா பசுபுலெட்டி, கே. ஜி. மோகன், செல்வ முருகன், லட்சுமி, ஹரிதா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆர். வி. சரண் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ரகுராம் இசைறமைத்திருக்கிறார். எளிய மனிதர்களின் யதார்த்த வாழ்வியலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை சுப்பர் டாக்கீஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சமீர் பரத் ராம் தயாரித்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. டீசரில் இன்றைய சூழலில் காவல்துறை- நீதித்துறை -பொதுமக்கள்- குற்றவாளிகள் -நிரபராதிகள் ஆகியோர் இடையேயான பிணைப்பை சிந்திக்க வைக்கும் வகையில் காட்சிகளும், வசனங்களும் இடம் பெற்றிருப்பதால், அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்திருக்கிறது.