குணச்சித்திர நடிகரும், இயக்குநருமான தம்பி ராமையா கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ராஜா கிளி’ எனும் திரைப்படத்தின் குறு முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
நடிகர் உமாபதி இராமையா இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் ‘ராஜா கிளி’. இதில் தம்பி ராமையா கதையின் நாயகனாக நடித்திருக்கிறார்.
இவருடன் சமுத்திரக்கனி, தீபா, அருள் தாஸ், பிரவீன் குமார், டேனியல் பாலாஜி, பழ. கருப்பையா, ஸ்வேதா, ரேஷ்மா பசுபலேட்டி, சுபா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
கோபிநாத் மற்றும் கேடர்நாத் ஆகியோர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு நடிகர் தம்பி ராமையா பாடல்களை எழுதி இசையமைத்திருக்கிறார்.
தொழிலதிபர் ஒருவரின் வாழ்வில் நடந்த அந்தரங்க விடயங்களை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் முருகப்ப செட்டியார் எனும் தொழிலதிபர் வேடத்தில் தம்பி ராமையா நடித்திருக்கிறார்.
மத்திம வயதுடைய இவரின் காதல் தொடர்பான விடயங்களை மையப்படுத்தி நகைச்சுவையாகவும், கவர்ச்சியாகவும் காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. இதனால் இந்த திரைப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.