தன்னுடைய 08 வயதில் தனது சொந்த தந்தையால் தான் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியதாக நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு தெரிவித்துள்ளார்.
மூத்த ஊடகவியலாளர் பர்கா தத் நடத்திய ‘We the women’ என்னும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய குஷ்பு, ” ஆணோ, பெண்ணோ ஒருவர் தான் குழந்தையாக இருக்கும்போது எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தலானது அவர்களது வாழ்க்கை முழுவதும் ஆறாத வடுவாய் தொடரும்.
“நான் என்னுடைய 08 வயதில் சொந்த தந்தையால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன். அதை வெளியேக் கூறினால், என்னுடைய அம்மாவையும் சகோதரர்களையும் அடித்து துன்புறுத்துவேன் என்று அவர் என்னை மிரட்டினார். அதனால் அப்போது அது குறித்து என்னால் வெளியே பேச முடியவில்லை.
“அதேபோல் தனது மனைவியையும், குழந்தைகளையும் அடிப்பதை தன்னுடைய உரிமையாக அவர் கருதினார். தன்னுடைய சொந்த மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதையும் அவர் தன்னுடைய பிறவி உரிமையாக கருதினார்.
“08 வயதில் அனுபவித்த பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக என்னால் 15 வயதில்தான் குரல் கொடுக்க முடிந்தது. அதற்கான தைரியம் எனக்கு அப்போதுதான் வந்தது. அம்மாவிடம் இதுகுறித்துக் கூறினால் அவர் அதை முதலில் நம்புவாரா என்ற தயக்கம் இருந்தது. ஏனெனில், அவர் கணவனின் மேல் பற்றுக் கொண்ட ஒரு மனைவியாக இருந்தார்.
“ஆனால், இதற்கு மேல் இதை தாங்கிக் கொள்ள முடியாது என்று, எனது தந்தையை எதிர்த்து பேசத் தொடங்கினேன். ஒரு சிறுமியாக என் மீது நான் கொண்ட தன்னம்பிக்கையின் பொருட்டு, தைரியத்தை வர வைத்து கொண்டு, என்னுடைய 15 வயதில் அவரை எதிர்த்தேன். ஒரு பெண்ணாக வீட்டிலிருக்கும் ஒரு ஆணை எதிர்க்கும் துணிவு வந்துவிட்டால், இந்த உலகத்திலும் நம்மால் எதையும் எளிதாக எதிர்கொள்ள முடியும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு குழந்தை பருவத்தில் தனக்கு நேர்ந்த துன்புறுத்தல்கள் குறித்து, குஷ்பு தற்போது வெளிப்படையாக பேசியிருப்பது, நாட்டில் குழந்தைகளுக்கு எதிராக நிகழும் பாலியல் வன்கொடுமைகள் குறித்த விவாதத்தை மீண்டும் எழுப்பியிருக்கிறது.
இது தொடர்பில் பிபிசி தமிழுக்கு குஷ்பு தெரிவித்துள்ளதாவது,
“சிறு வயதில் எனக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து தற்போது வெளியே பேசிய பிறகு, இத்தனை ஆண்டுகளாக மனதில் இருந்த பெரும் பாரத்தை கீழே இறக்கி வைத்தது போல ஒரு நிம்மதி கிடைத்திருக்கிறது.
“90 சதவீத பாலியல் துன்புறுத்தல்கள் நமக்கு நன்கு தெரிந்த, நம்மைச் சுற்றியுள்ள நபர்களால்தான் ஏற்படுகின்றன என்று தரவுகள் கூறுகின்றன. என்னுடைய ஆரம்ப காலகட்டத்திலிருந்து குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளாக இருந்தாலும் சரி, பெண்களுக்கு எதிரான பிரச்னைகளாக இருந்தாலும் சரி, எல்லாவற்றிற்கும் நான் முதல் ஆளாக குரல் கொடுத்து வந்திருக்கிறேன்.
“ஏனென்றால், அத்தகைய பிரச்சினைகள் அனைத்தையும் நானும் அனுபவித்திருக்கிறேன். பாலியல் ரீதியாக ஒருவர் துன்புறுத்தலுக்கு உள்ளாகும்போது, அதனுடைய காயங்கள் ஆறினாலும் அந்த தழும்புகள் நமது வாழ்நாள் முழுவதும் தொடரும்.
“தங்களுக்கு நிகழும் பாலியல் துன்புறுத்தல் குறித்து வெளியே பேசுவதற்கு பாதிக்கப்பட்டவர்கள் யாரும் வெட்கப்பட தேவையில்லை. உண்மையில் வெட்கப்பட வேண்டியது இத்தகைய தவறுகளை செய்யும் ஆண்கள்தான்.
“என்னுடைய பதினைந்து வயதில் எனக்கு நேர்ந்த பிரச்னைகள் குறித்து, தைரியமாக நானே குரல் கொடுத்தேன். அதன்பின் சொந்தமாக உழைக்க தொடங்கி, இன்று வரை இந்த சமூகத்தில் ஒரு மரியாதைக்குரிய இடத்தில் இருக்கிறேன்.
“இன்னும் சொல்ல வேண்டுமென்றால், எனக்கு செய்த கொடுமைகளுக்கான பலனை எனது தந்தை அவரது கடைசி காலத்தில் அனுபவித்தார். அவர் இறந்தபோது அந்த கடைசி ஊர்வலத்தில், எனது சகோதரர்கள் கூட யாரும் பங்குகொள்ளவில்லை. அவர் அனாதையாகத்தான் சென்றார். இதற்கு பெயர்தான் கர்மா என்பார்கள்.
“தங்களுடைய குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகியிருக்கிறார்கள் என்று தெரிய வரும்போது, பெற்றோர்கள் தைரியமாக முன்வந்து வழக்கு தொடர வேண்டும். இன்றைக்கு இருக்கும் போக்ஸோ சட்டமும், சமூக ஊடகங்களும் மற்றும் பல சமூக அமைப்புகளும் அதற்கு ஆதரவாக குரல் கொடுக்கும்” எனவும் குஷ்பு நம்பிக்கையளித்தார்.
மூலம் – பிபிசி