‘அயலி’ எனும் இணையத் தொடர் மூலம் பிரபலமான நடிகை அபி நட்சத்திரா, நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பார்வை’ எனும் சுயாதீன விடியோ இசைப்பாடல், சர்வதேச பெண்மணிகளின் தினத்தையொட்டி இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
‘பிஸ்கோத்’, ‘காசேதான் கடவுளடா’ ஆகிய திரைப்படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஆர்.எஸ். ராஜ் பிரதாப் இசையில் உருவாகி இருக்கும் சுயாதீன விடியோ இசை அல்பம் ‘பார்வை’. இந்த பாடலை பாடலாசிரியர் அருண் பாரதி எழுத, பின்னணி பாடகி எம். எம். மானஸி மற்றும் பின்னணி பாடகர் சாய் விக்னேஷ் ஆகியோர் பாடியிருக்கிறார்கள். இந்தப் பாடலுக்கான காணொளியை பிரசாந்த் ராமன் இயக்க, ஈஸ்வரன் கார்த்திகேயன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சமூகத்தில் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் உருவான இந்த ‘பார்வை’ எனும் சுயாதீன விடியோ இசைப் பாடலை துர்ம் புரொடக்சன் ஹவுஸ் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் தம்பிதுரை மாரியப்பன் தயாரித்திருக்கிறார்.
பெண்கள் தங்களது நாளாந்த நடைமுறை வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்தும், மாணவிகள் பள்ளிக்கூடத்திற்கு செல்லும்போது அவர்கள் எதிர்கொள்ளும் உளவியல் சிக்கல்கள் குறித்தும், பெண்கள் மீதான ஆண்களின் தவறான பார்வையை மையப்படுத்தியும் இந்த பாடல் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாகவே இணையத்தில் வெளியான இந்த வீடியோ இசை ஆல்பத்திற்கு, பெண்களிடத்தில் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு மக்களிடமும் வரவேற்பை பெற்று, பாராட்டுகளைக் குவித்து வருகிறது.