நட்சத்திர வாரிசாக இருந்தாலும், நட்சத்திர அந்தஸ்தை பெறுவதற்காக கடுமையாக உழைத்துவரும் நடிகர் சாந்தனு பாக்யராஜ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘இராவண கோட்டம்’ எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதியை பட தயாரிப்பாளரான கண்ணன் ரவி அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்.
‘மதயானை கூட்டம்’ பட இயக்குநரும், நடிகருமான விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘இராவண கோட்டம்’.
இதில் சாந்தனு பாக்யராஜ் கதையின் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை ‘கயல்’ ஆனந்தி நடித்திருக்கிறார். இவர்களுடன் பிரபு, இளவரசு, அருள் தாஸ், தீபா சங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். மண்ணின் மனம் கமழும் படைப்பான இந்த படத்தை கண்ணன் ரவி தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா டுபாயில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. தமிழக அமைச்சர் துரைமுருகன், தயாரிப்பாளர்கள் ஐசரி கே. கணேஷ், லைகா சுபாஷ்கரன், ஜோன் பிரிட்டோ ஆகியோர் சிறப்பு அதிதியாக பங்குபற்றி இப்படத்தின் இசையை வெளியிட்டனர்.
இதன்போது பேசிய தயாரிப்பாளர் கண்ணன் ரவி,
”ஐக்கிய அரபு அமீரகத்தில் வணிகம் செய்து வந்தாலும், தாய்மண்ணான தமிழகத்தின் கலாசாரம் மற்றும் பாரம்பரிய பண்பாடுகளை முன்னிறுத்தி திரைப்படங்களை தயாரிக்க வேண்டும் என்பது எனது விருப்பம்.
இயக்குநர் விக்ரம் சுகுமாரன் என்னை சந்தித்து அது போன்றதொரு கதையை விவரித்தவுடன் அதனை தயாரிக்க சம்மதித்தேன். படத்தின் பணிகள் திட்டமிட்டபடி நிறைவடைந்திருக்கிறது. இந்த திரைப்படம் மே 12ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகைகளில் வெளியாகிறது” என்றார்.