செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா விடுதலை 1 | திரைவிமர்சனம்

விடுதலை 1 | திரைவிமர்சனம்

2 minutes read

தயாரிப்பு : ஆர். எஸ். இன்ஃபோடெய்ன்மென்ட்

நடிகர்கள் : சூரி, விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், பவானி ஸ்ரீ, மூணார் ரமேஷ், தமிழ் மற்றும் பலர்.

இயக்கம் : வெற்றி மாறன்

மதிப்பீடு : 3.5 / 5

அருமபுரி எனப்படும் மலையும் மலை சார்ந்த பகுதியிலும் ஏராளமான கனிம வளங்கள் இருக்கின்றன. இந்த கனிம வளங்களை பயன்படுத்திக் கொள்ள தனியார் நிறுவனம் ஒன்றிற்கு அரசு அனுமதி அளிக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் படை என்ற மக்கள் போராளிகள் இயக்கம் ஆயுதம் தாங்கிய போராட்டத்தை முன்னெடுக்கிறது. இவர்களை அடக்கி ஒடுக்குவதற்காக அரசு இயந்திரம், காவல்துறையில் தனிப்படையை அமைக்கிறது. இவர்களுக்கும், மக்கள் ஆதரவுடன் இயங்கும் மக்கள் படைக்கும் இடையேயான மோதல்களை இப்படத்தின் கதை.

அடர்ந்த வனப்பகுதியில் சோதனை சாவடிகளை அமைத்து, மக்கள் படையின் நடமாட்டத்தை குறைத்து, அப்பகுதியை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர தனிப்படையினர் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்த தருணத்தில் காட்டில் செயல்படும் காவல் துறையினருக்கு உதவி செய்யும் காவலராக குமரேசன் ( சூரி) நியமிக்கப்படுகிறார். சக மனிதரிடத்தில் இவர் காட்டும் மனிதநேய செயல், காவல்துறை அதிகாரத்திற்கு தவறாக தெரிகிறது. ஆனால் இவருக்கு ஒரு காதலை அந்த சம்பவம் பெற்று தருகிறது. சூரி – பவானி ஸ்ரீ இடையான காதல் உயிர்ப்புள்ளதாகவும், அர்த்தமுள்ளதாகவும், திரைக்கதையின் மைய சரடாகவும் இருப்பதால் இயல்பைக் கடந்து ரசிக்க முடிகிறது.  மக்கள் படை தலைவனை காவலர் குமரேசன் தன்னுடைய இயல்பான பணியின் ஊடே சந்திக்கிறார். ஆனால் அவர்தான் காவல்துறை தேடும் குற்றவாளி என அவருக்கு அந்த தருணத்தில் தெரியவில்லை. தெரிய வரும்போது அவர் மக்கள் படை தலைவனை பிடிக்க முயற்சிக்கிறார். அவரால் முடிந்ததா? இல்லையா? என்பதே முதல் பாகத்தின் திரைக்கதை.

சூரி- காவலர் குமரேசனாகவே மாறி ரசிகர்களின் மனதில் நிறைகிறார். அதிலும் உச்சகட்ட காட்சியில் இடம்பெறும் சண்டை காட்சியில் அசலாகவே அடி வாங்கி நடித்திருக்கும் இவரது அர்ப்பணிப்பு… ரசிகர்களை வியப்பில் ஆழ்த்துகிறது.

தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகர்களாக இருந்து கதாநாயகர்களாக உயர்ந்த ‘வைகைப்புயல்’ வடிவேலு, விவேக், சந்தானம், யோகி பாபு ஆகியோர்களை விட, எக்சன் ஹீரோவாக மாற்றம் அடைந்து, குமரேசன் கதாபாத்திரத்தில் அசத்தியிருக்கும் நடிகர் சூரி… உண்மையிலேயே தமிழ் திரையுலகில் கதாநாயக பிம்பத்துடன் வலம் வருவதற்கு தகுதியானவர் என தன்னை நிரூபித்திருக்கிறார். தனுஷ் போன்ற நட்சத்திர அந்தஸ்துள்ள நடிகரை அசுரனாக இயக்கிவிட்டு.. சூரியை தெரிவு செய்து, ‘விடுதலை’ படத்தை இயக்கியதன் மூலம்.. ‘திரைப்படம் என்பது இயக்குநர்களின் ஆதிக்கத்திற்குட்பட்ட ஊடகம்’ என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக இயக்குநர் வெற்றிமாறனுக்கு சல்யூட் அடிக்கலாம். இந்த ஆண்டும் இவருக்கோ அல்லது சூரிக்கோ தேசிய விருது கிடைப்பதற்கான வாய்ப்பு பிரகாசம்.

சூரியை கடந்து தலைமை செயலாளர் வேடத்தில் நடித்திருக்கும் ராஜீவ் மேனன், சுனில் மேனன் என்ற காவல்துறை உயர் அதிகாரி வேடத்தில் நடித்திருக்கும் கௌதம் வாசுதேவ் மேனன், திரைக்கதையின் விறுவிறுப்பிற்கு பேருதவி புரிந்திருக்கிறார்கள்.

மக்கள் படை தலைவனாக வாத்தியார் என்ற பெருமாள் கதாபாத்திரத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி… வித்யாசமான தோற்றம் மற்றும் உடல் மொழியில் நடித்து ரசிகர்களை வசீகரிக்கிறார். முதல் பாதியில் இரண்டு காட்சிகளிலும், முதல் பாகத்தின் உச்சகட்ட காட்சியிலும் தோன்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் நடிப்பும்… பேச்சும்… பார்வையாளர்களை கவர்ந்திருக்கிறது.

சூரிக்கு ஜோடியாக நடித்திருக்கும் நடிகை பவானி ஸ்ரீ-  டஸ்கி மேக்கப்பில் அசல் மலைவாழ் பெண்ணாக மாறி, தன் நேர்த்தியான நடிப்பை வழங்கி ரசிகர்களை ஆச்சரியப்படுத்துகிறார். காவல்துறை விசாரணையின் போது உண்மையை ஒப்புக் கொள்வதற்காக இடது கையை உயர்த்தும் போது… ரசிகர்களிடத்தில் கண்ணீர் துளிகளை வரவழைக்கிறார்.

காவல்துறை விசாரணை என்றாலே.. அது மனித உரிமைக்கு அப்பாற்பட்டது தான் என்பதை இயக்குநர் வெற்றிமாறன் தொடர்ந்து தன்னுடைய படைப்புகளில்  உரத்து வலியுறுத்தி வருகிறார். அதே தருணத்தில் காவல்துறையில் பதவிகளுக்கு இடையேயான அதிகார ஆதிக்க அரசியலை விரிவாக விவரித்து.. சீரமைக்கப்பட வேண்டியது காவல்துறையினரின் பதவிகளும்.. அவர்களது அதிகாரங்களும் தான் என்பதை மறைமுகமாக உணர்த்தி இருக்கிறார்.

நட்சத்திரங்களைக் கடந்து விடுதலை படத்தின் முதல் பாகத்தில் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் மற்றும் இசையமைப்பாளர் இசைஞானி இவர்களின் கூட்டணி, பார்வையாளர்களை பரவசப்படுத்தி, உணர்ச்சிவசப்பட வைக்கிறது.

‘விடுதலை’ படத்தின் முதல் பாகத்தின் கதையை பின்னணி குரல் மூலம் சொல்லி இருப்பது ஏன்? என்ற வினா எழுகிறது. இதற்கான விடை இரண்டாம் பாகத்தில் இருக்கக்கூடும்.

முதல் பாகத்தின் முடிவு ரசிகர்களை உற்சாகப்பட வைத்திருக்கிறது என்றால்… அடுத்த பாகத்தில் இடம் பெறும் சில காட்சிகளை காண்பித்து எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறார்கள்.

விடுதலை 1 – வெற்றி ( மாறனின்) அலை.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More