‘ரன்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை மீரா ஜாஸ்மின். இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்து நட்சத்திர நடிகையாக வலம் வந்தார்.
தொடர்ந்து மலையாளத் திரை உலகில் கவனம் செலுத்தி வந்தாலும், தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளிலும் நடித்து வந்தார். இவரது நடிப்பில் 2014 ஆம் ஆண்டில் ‘விஞ்ஞானி’ எனும் திரைப்படம் தமிழில் வெளியானது.
அதன் பிறகு தமிழில் எந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொள்ளாத மீரா ஜாஸ்மின் தொடர்ந்து மலையாளத்தில் மட்டுமே நடித்து வந்தார்.
இந்நிலையில் இயக்குநர் எம். பத்மகுமார் இயக்கத்தில் மலையாளம் மற்றும் தமிழில் தயாராகும் பெயரிடப்படாத படத்தில் கதையின் நாயகியாக நடிக்க மீரா ஜாஸ்மின் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
‘விக்ரம்’ படப் புகழ் நடிகர் நரேன் கதையின் நாயகனாக நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு கொச்சியில் இன்று தொடங்கி இருக்கிறது.
ப்ளூ மவுண்ட் புரொடக்ஷன்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ரஞ்சித் மனம்பரக்கத், எம். பத்மகுமார், ஸ்ரீராம் மனம்பரக்கத் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படத்தின் கதையை அர்ஜுன் டி சத்யன் எழுதியிருக்கிறார்.
எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழில் நடிகை மீரா ஜாஸ்மின் நடிக்க ஒப்புக் கொண்டிருப்பதால் அவருடைய ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.