தயாரிப்பு: சந்திரா ஆர்ட்ஸ்
நடிகர்கள்: ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ், இயக்குநர்கள் மகிழ்ந்திருமேனி, மோகன் ராஜா, கரு. பழனியப்பன், ரகு ஆதித்யா, கனிகா, ராஜேஷ் மற்றும் பலர்.
இயக்கம்: வெங்கட கிருஷ்ண ரோஹந்த்
மதிப்பீடு: 3.5 / 5
‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற தமிழர்களின் தனித்துவமான உரிமை முழக்கத்தை மையப்படுத்தி, அதே பெயரில் வெளியாகி இருக்கும் இந்த திரைப்படம், அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்ததா? இல்லையா? என்பதனை தொடர்ந்து காண்போம்.
இலங்கையில் தொடர்ந்து உள்நாட்டு போர் நடைபெற்ற சூழலில்.. ஆமியின் தொடர் குண்டு வீச்சு ஒலியை விரும்பாத ஒரு சிறுவன்.. அதிலிருந்து தப்பிப்பதற்காக ஒலி எழுப்பி கொண்டே இருக்கிறார். அது அவனுக்கு நிவாரணத்தை தருவதுடன் அவனுள் இருக்கும் இசை திறமையும் வெளிப்படுத்துகிறது. எம் மண்ணில் பிறந்த அந்த சிறுவன், கிறித்துவ பாதிரியார் (ராஜேஷ்) ஒருவர் மூலம் லண்டனுக்கு செல்ல திட்டமிடுகிறார். இதற்காக கண்டி புற வழிச்சாலை வழியாக வாகனத்தில் பயணிக்கும் போது, ஆமியின் சோதனையில் சிக்கி.. குண்டு வெடிப்பிற்கு ஆளாகி.. அனாதையாகிறார்.
புனிதன் என்ற இயற்பெயரை கொண்ட அவன், இந்தியாவில் அகதியாக புலம்பெயர்ந்து ஊத்துப்பட்டி அகதிகள் முகாமில் அடைக்கலமாகிறார். ஆனால் சூழலின் காரணமாக கிருபா நதி என்ற பெயரில்,தமது பெயரை பதிவு செய்து கொண்டு வாழ தொடங்குகிறார்.
இவர் இசைத்துறையில் தேர்ச்சி பெற்று சர்வதேச அளவிலான புது இசை கோர்வை ஒன்றே உருவாக்கி அதை லண்டனில் உள்ள றோயல் மியூசிக் அகாதெமியின் போட்டி பிரிவுக்கு அனுப்புகிறார். ஆனால் நாடற்றவன் என்ற காரணத்திற்காக அவர் போட்டியிலிருந்து விலக்கப்படுகிறார். இது தொடர்பாக போட்டியை நடத்தும் விழா குழுவினருக்கு நெருக்கடியும், அழுத்தமும் ஏற்படுகிறது. இங்கிலாந்து மற்றும் இந்திய அரசாங்கம் இரண்டும் இணைந்து, தமிழகத்தில் அகதியாக வாழும் புனிதன் என்ற கிருபாநிதிக்கு கடவு சீட்டு வழங்கி, அவரை அந்த தனித்திறன் இசை போட்டிக்கு அனுப்புகிறது. அங்கு அவர் தான் யார்? என்ற உண்மையை சொல்வதுடன், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ எனும் கருத்தியலை இந்த உலகம் மெய்ப்பிக்க வேண்டும். அதற்கான செயல் திட்ட நடவடிக்கையாக பொதுவாக்கெடுப்பை முன்னெடுக்கலாமே.. ! என தன் எண்ணத்தையும், கதையின் அடி நாதத்தையும் பகிர்ந்து கொள்கிறார். இதற்கிடையில் அவர் கிருபா நதி என்ற பெயரில் தனது பெயரை பதிவு செய்து கொண்டு வாழ்ந்தது ஏன்..? கிருபா நதியை சட்டவிரோதமாக கொலை செய்ய வேண்டும் என தமிழக காவல்துறை உயரதிகாரி ஒருவர் தொடர்ச்சியாக முயற்சிக்கிறார். அது ஏன்..? ‘செம்மறிக்குட்டி’ என செல்லமாக தனது மகளை விளிக்கும் தேவாலய பியானோ இசை கலைஞர் மோகன் ராஜா- மேகா ஆகாஷ் இவர்களுக்கான உறவு,.. நிலச்சரிவில் சிக்கும் இந்த தொன்மையான தேவாலயம்.. இதனை புதுப்பிக்கும் பணியில் ஈடுபடும் புனிதன்.. இப்படி ஏராளமான சுவாரசியமான முடிச்சுகளை போட்டுக் கொண்டே இப்படத்தின் திரைக்கதையை விவரித்திருக்கிறார் அறிமுக இயக்குநரான வெங்கட கிருஷ்ண ரோஹந்த்.
திறமையான சர்வதேச இசைக் கலைஞர் ஒருவரின் மூலம் நாடற்றவர்களின் குரலை வலிமையாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர். இதற்காக இயக்குநரை பாராட்டலாம். புனிதன்- கிருபா நதி என இரண்டு பெயரிலும் நடித்திருக்கும் விஜய் சேதுபதி.., இயக்குநர் விவரித்த காட்சிகளை ஓரளவிற்கு உள் வாங்கி நடித்திருக்கிறார். ஒவ்வொரு இடத்திலும் வெவ்வேறு உடல் மொழியை விஜய் சேதுபதி காட்டியிருந்தாலும்… உச்சகட்ட காட்சியில் அவர் பேசும் வசனங்கள், மனதில் பசு மரத்தாணி போல் பதிவதால் அவரது நடிப்பு ஓகே.
விஜய் சேதுபதிக்கு ஜோடி என்பதால் ஸ்லிம்மாக இருந்த மேகா ஆகாஷை சற்று சதை பற்றோடு நடித்தால் நன்றாக இருக்கும் என்று படக் குழுவினர் கருதி இருக்கிறார்கள் போலும்… ஒரு இசை கலைஞருடைய உடல் மொழி இல்லாமல் கவர்ச்சியான கதாநாயகி என்ற உடல்நிலையுடன் மேகா ஆகாஷ் திரையில் தோன்றுவதால்.. சில இடங்களில் மட்டும் ரசிக்க முடிகிறது. பாதிரியாராக வரும் மறைந்த ‘ஜனங்களின் கலைஞன்’ விவேக் பார்வையாளர்களிடத்தில் கண்ணீர் துளிகளை வரவழைக்கிறார். கிருபா நதியை கொல்ல துடிக்கும் காவல்துறை உயரதிகாரியாக நடித்திருக்கும் இயக்குநர் மகிழ்திருமேனி கண்களாலேயே முழு வில்லத்தனத்தையும் காட்டி ரசிகர்களை பயமுறுத்துகிறார்.
திரைக்கதையின் பல இடங்களில் பல கேள்விகள் பார்வையாளர்களுக்கு எழுகிறது. இருப்பினும் இயக்குநர் சொல்ல வேண்டும் என நினைத்த கருத்து.. சர்வதேச மக்களுக்கானது என்பதால்.. குறைகளை மறந்து தாராளமாக பாராட்டலாம்.
”இமைத்திடாதே உன் விழியின் வழியே நுழைய பார்க்கிறேன்…” என்ற பாடல் கவிதையாகவும், காதலாகவும், மெல்லிசையாகவும்… ரசிகர்களின் மனதிலும், காதிலும் சுகமாக தங்குகிறது. நீண்ட நாட்கள் கழித்து கவிதையான பாடல் வரிகள். இந்த பாடலை தவிர்த்து பின்னணியிசையிலும் நிவாஸ் கே. பிரசன்னா தன் திறமையை நிரூபித்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளரும், பட தொகுப்பாளரும் இயக்குநர் சொல்ல வந்த கருத்தை உள்வாங்கி.. அதற்கேற்ற வகையில் அவர்களுடைய பங்களிப்பை முழுமையாக வழங்கி இருக்கிறார்கள்.
தமிழகத்தை சேர்ந்த கலைஞர்களான ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, ராஜேஷ், கனிகா என அனைவரும் இலங்கை தமிழ்.. ஈழத் தமிழ்.. பேசுகிறோம் என்று சொல்லி, வழக்கம் போல் எம்முடைய தமிழைக் கொச்சைப்படுத்தி இருக்கிறார்கள். அவர்கள் பேசும் எம்முடைய தமிழில் உணர்வுபூர்வமான ஜீவன் இல்லை.
இருப்பினும் மக்களிடத்தில் செல்வாக்கு மிக்க நடிகரான விஜய் சேதுபதியை வைத்து, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற ஒரு உலகளாவிய கருத்தினை சமரசத்துடனாவது சொல்ல முயன்றதற்காக இயக்குநர் உள்ளிட்ட பட குழுவினரை ஒரு பெரும் பூங்கொத்தைக் கொடுத்து பாராட்டலாம்.
யாதும் ஊரே யாவரும் கேளிர் – உலகை ஆளும் அரசாங்கத்தை அசைக்கும் குரல்.