சீயான் விக்ரம் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘தங்கலான்’ எனும் திரைப்படத்தில் அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் நடிகை மாளவிகா மோகனின் கதாபாத்திர தோற்ற புகைப்படம், அவரது பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்பட்டிருக்கிறது.
நட்சத்திர இயக்குநரும், தயாரிப்பாளருமான பா. ரஞ்சித் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘தங்கலான்’. இதில் சீயான் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி திருவோத்து, பசுபதி, ஹரி கிருஷ்ணன், வேட்டை முத்துக்குமார் இவர்களுடன் ஹொலிவுட் நடிகர் டேனியல் கால்டகிரேன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். பிரித்தானிய காலகட்டத்தில் கோலார் தங்க வயலில் பின்னணியில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா பிரம்மாண்டமான பொருட்செலவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் தயாரித்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகை மாளவிகா மோகனனின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் இந்த படத்தில் நடித்திருக்கும் கதாபாத்திர தோற்ற புகைப்படத்தை படக்குழு பிரத்யேகமாக வெளியிட்டிருக்கிறது. இதில் அவர் பழங்குடி இன மக்களின் ராணியாகவும், தங்க நகைகளால் அலங்கரிக்கப்பட்ட தோற்றத்துடன் தோன்றுவதால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.