சான்றிதழ் – விமர்சனம்
தயாரிப்பு : வெற்றிவேல் சினிமாஸ்
நடிகர்கள் : ஹரிகுமார், ரோஷன் பஷீர், ஆஷிகா அசோகன், ரவி மரியா, ராதாரவி, அருள்தாஸ், மனோபாலா, ஆதித்யா கதிர், கௌசல்யா மற்றும் பலர்.
இயக்கம் : ஜே வி ஆர்
மதிப்பீடு : 2/5
இந்தியாவின் சிறந்த முன்னுதாரண கிராமமாக தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கருவறை எனும் கிராமம் விருதுக்காக தெரிவு செய்யப்படுகிறது. இந்த விருதினை பெற கருவறை கிராம மக்கள் மறுப்பு தெரிவிக்கிறார்கள். இதனால் ஆத்திரமடையும் மாநில அமைச்சர் ஒருவர் கட்டுப்பாட்டுடன் திகழும் கருவறை எனும் கிராமத்தின் நற்பயிருக்கு களங்கம் விளைவிக்க முயற்சிக்கிறார். அவரது முயற்சி வெற்றி பெற்றதா? அந்த கிராமத்து மக்களின் கோரிக்கையை ஏற்று அவர்களைத் தேடி விருது வந்ததா? இந்த கிராமத்தின் பின்னணி என்ன? இது போன்ற விடயங்களை உள்ளடக்கியதுதான் இப்படத்தின் திரைக்கதை.
முதல் பாதியில் கருவறை எனும் கிராமம் காண்பிக்கப்படும் போது அதன் தலைவாசல் – புறவாசல் என இரண்டு புறமும் நுழைவு வாயிலை வைத்து அங்கு வாழும் மக்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள். குறிப்பாக மாலை ஆறு மணிக்கு மேல் எந்த குடும்பத்திலும் தொலைக்காட்சி தொடர்களை மக்கள் பார்க்க கூடாது…. மக்கள் மது அருந்தினாலும் அளவாகத்தான் அருந்த வேண்டும் …என பல கட்டுப்பாடுகள். இவை சுவாரசியமாக இருந்தாலும் திரையில் காண்பிக்கப்படும் போது ரசிகர்களுக்கு கடத்தப்பட வேண்டிய சுவாரசியம் குறைகிறது.
இந்த கிராமத்தின் மாற்றத்திற்கு வித்திட்டவர் அந்த ஊரில் வாழ்ந்த வெள்ளைச்சாமி எனும் கதாபாத்திரம். இந்த கதாபாத்திரத்தில் நடன இயக்குநரும், நடிகரும், இயக்குநருமான ஹரிகுமார் வெண்ணிற உடையில் தோன்றி நேர்த்தியாக நடித்திருக்கிறார். ஊருக்காக இவர் தற்கொலை செய்துகொள்வதால்… ஊரே திருந்திவிடுவதாக காட்டுவது டூ மச்.
இக்கிராமத்தின் கட்டுப்பாடுகளை மக்கள் மீறுகிறார்களா? இல்லையா? என்பதைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் நாயகன் ரோஷன் பஷீருக்கும், அந்த ஊரின் கட்டுப்பாடுகள் குறித்து அறிந்து கொள்ள விரும்பும் ஊடகவியலாளராக அந்த கிராமத்திற்குள் ஊடுருவும் நாயகி ஆஷிகா அசோகனுக்கும் இடையேயான காதல்… ரசிகர்களுக்கு ஆறுதல்.
மனோபாலா, ரவி மரியா, கௌசல்யா, ராதா ரவி போன்ற அனுபவமிக்க நடிகர்கள்.. தங்கள் கதாபாத்திரங்களை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு, பாடல்கள், பின்னணி இசை, படத்தொகுப்பு, கலை இயக்கம் என அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும் இயக்குநரின் கனவை நனவாக்க கடும் உழைப்பை முழுமையாக வழங்கியிருக்கிறார்கள். இருப்பினும் இதுபோன்று இருந்தால் நல்லா இருக்கும்…! என்ற கற்பனை இன்னும் சற்று சுவராசியமாக சொல்லப்பட்டிருந்தால் பார்வையாளர்களால் வரவேற்கப்பட்டிருக்கும்.
சான்றிதழ்- அச்சு பிழை.