சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் மற்றும் அமிதாஷ் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் ‘பரம்பொருள்’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது.
இதனை மணிரத்னம் வெளியிட படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர்.
இயக்குநர் அரவிந்த் ராஜ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் ‘பரம்பொருள்’. இதில் ஆர். சரத்குமார், அமிதாஷ், காஷ்மிரா பர்தேசி, பாலாஜி சக்திவேல், வின்சென்ட் அசோகன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
எஸ். பாண்டி குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.
சிலை கடத்தலை மையப்படுத்தி எக்சன் திரில்லர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை கவி கிரியேஷன்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் மனோஜ் மற்றும் கிரிஷ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
செப்டம்பர் ஒன்றாம் திகதியன்று உலகம் முழுதும் பட மாளிகையில் வெளியாகவிருக்கும் இப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதில் சரத்குமார் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார். காட்சிகள் பரபரப்பாக இருப்பதால் பார்வையாளர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது.
படத்தைப் பற்றி நாயகன் அமிதாஷ் பேசுகையில்,” இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன்.
ஆனால் சிறிய தயக்கமும் இருந்தது. பிறகு முயற்சித்துப் பார்க்கலாம் என்ற கோணத்தில் ஆடை வடிவமைப்பாளரான பூர்ணிமா மூலம் தொடர்பு கொண்டோம்.
படத்தின் கதையை கேட்ட யுவன் சங்கர் ராஜா இசையமைக்க ஒப்புக்கொண்டார். இதுவே இப்படத்தின் வெற்றிக்கு முதல் படி. இப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடலையும் அனிருத் நட்புக்காக பாடியிருக்கிறார்.
அவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சிலை கடத்தல் தொடர்பான படம் என்றாலும் இயக்குநர் அரவிந்தராஜ் சுவராசியமாக படத்தின் திரைக்கதையை அமைத்திருக்கிறார்.
அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து படத்தை பார்த்து ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.