இயக்குநரும், நடிகருமான சேரன் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘தமிழ்க்குடிமகன்’ எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டது.
இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் வெளியிட, இயக்குநர்கள் தங்கர் பச்சான், அமீர், மாரி செல்வராஜ் ஆகியோர் இணைந்து பெற்றுக் கொண்டனர்.
இயக்குநர் இசக்கி கார்வண்ணன் இயக்கத்தின் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘தமிழ்க்குடிமகன்’. இதில் சேரன், ஸ்ரீ பிரியங்கா, லால், எஸ். ஏ. சந்திரசேகர், எழுத்தாளர் வேல. ராமமூர்த்தி, துருவா, தீப்ஷிகா, அருள் தாஸ், ரவி மரியா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி. எஸ் . இசையமைத்திருக்கிறார்.
சாதியம் மற்றும் குலத்தொழில் ஆகியவற்றை மையப்படுத்தி உணர்வு பூர்வமான படைப்பாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லட்சுமி கிரியேஷன்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் இயக்குநர் இசக்கி கார்வண்ணன் தயாரித்திருக்கிறார்.
விரைவில் வெளியாக திட்டமிடப்பட்டு வரும் இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள கமலா திரையரங்க வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இதில் தமிழ் திரையுலகின் தனித்துவமான படைப்பாளிகளாக வலம் வரும் தங்கர் பச்சான், அமீர், மாரி செல்வராஜ், பொன்வண்ணன், சரத்குமார் உள்ளிட்ட பலர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றினர்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” சாதி சார்ந்த வாழ்க்கை முறை எப்படி இருக்கும் என்பதை இப்படத்தில் யதார்த்தமாக விவரித்திருக்கிறோம்.
சாதியமும், குலத்தொழிலும் எப்படி பின்னிப் பிணைந்து ஏற்றத்தாழ்வினை உருவாக்குகிறது என்பதனையும் எடுத்துரைத்திருக்கிறோம்.
நான் சந்தித்த அனுபவங்களை படைப்பாக உருவாக்கி இருக்கிறேன். பிறக்கும்போது அனைத்து குழந்தைகளும் சமம் தான். அவர்கள் வளரும் போது தான் குல தொழிலையும் சாதியத்தையும் அடிப்படையாக வைத்து ஏற்றத்தாழ்வினை உருவாக்குகிறார்கள்.
இதில் சாதி குறித்தும், சாதியம் குறித்தும், குலத்தொழில் குறித்தும், அதனால் ஏற்படும் அடிமைத்தனம் குறித்தும் காட்சிப்படுத்தி இருக்கிறோம்.
மேலும் இப் பிரச்சனைக்கான தீர்வையும் முன் வைத்திருக்கிறோம். இந்த திரைப்படம் தற்போதைய காலகட்டத்திற்கு அவசியம் தேவை.
அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து இப்படைப்பை கண்டு ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.