‘நான் நினைத்ததை விட பத்து மடங்கு படம் நன்றாக வந்திருக்கிறது. இதை எதிர்பார்க்கவில்லை’ என ரஜினிகாந்த் சொன்னதாக ‘ஜெயிலர்’ படத்தின் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தெரிவித்திருக்கிறார்.
இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஒகஸ்ட் 10-ம் திகதியன்று உலகம் முழுவதும் 7000 திரைகளில் ‘ஜெயிலர்’ திரைப்படம் திரையிடப்பட்டது.
கலவையான விமர்சனங்கள் வெளியானாலும் முதல் வார முடிவில் இந்திய மதிப்பில் 375 கோடியே 40 லட்சம் ரூபாய் வசூலித்து புதிய சாதனையை படைத்திருப்பதாக பட தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ திரைப்படத்தை மாபெரும் வெற்றியாக்கிய ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது.
இவ்விழாவில் இயக்குநர் நெல்சன் திலீப் குமார், நடிகர் வசந்த் ரவி, நடிகை மிர்ணா, நடிகர் ஜாபர் சாதிக், பாடலாசிரியர் சுப்பர் சுப்பு, சண்டை பயிற்சி இயக்குநர் சிவா, நடிகர் ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட படக் குழுவினர் பங்குபற்றினர்.
படத்தை வெற்றி பெறச் செய்த ரஜினி ரசிகர்களுக்கும், பார்வையாளர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவித்து அப்படத்தின் இயக்குநர் பேசுகையில்,
” இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்கு மூன்று நாள் முன்பாக ஜெயிலர் திரைப்படத்தை சுப்பர் ஸ்டாருக்கு பிரத்யேகமாக காண்பித்தோம்.
படத்தைப் பார்த்த பிறகு அவரிடம், ‘ஜெயிலர் படத்தின் கதையை உங்களிடம் சொன்னபோது உங்களுக்கென்று காட்சிகள் மனதில் தோன்றியிருக்கும்.
அதற்கு நிகராக இருக்கிறதா?’ என்று கேட்டேன். அதற்கு சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ‘நான் எதிர்பார்த்ததை விட பத்து மடங்கு நன்றாக வந்திருக்கிறது.
இதை நான் எதிர்பார்க்கவில்லை.” என பதிலளித்தார். அவருடைய பதிலால் எனக்கு மனநிறைவு கிடைத்தது. இருப்பினும் இப்படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்கு பிறகு அவரை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க ஆவலாக இருக்கிறேன்” என்றார்.
இதனிடையே தமிழ் திரையுலகில் நட்சத்திர நடிகர்களின் திரைப்படம் வெளியான முதல் வாரத்தில் இந்திய மதிப்பில் 375 கோடி ரூபாயை வசூலித்திருப்பது புதிய சாதனை என திரையுலக வணிகர்கள் தெரிவித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.