‘புரட்சி தளபதி’ விஷால் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘மார்க் ஆண்டனி’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதனை முன்னணி நட்சத்திர நடிகரான கார்த்தி தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் இப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’. இதில் விஷால் இரட்டை வேடத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் எஸ்.ஜே சூர்யா, ரித்து வர்மா, சுனில், செல்வ ராகவன், ரெடின் கிங்ஸ்லி, அபிநயா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். டைம் ட்ராவல் எனும் விடயத்தை முதன்மைப்படுத்தி கேங்ஸ்டர் பின்னணியிலான திரைப்படமாக உருவாகி இருக்கும் இதனை மினி ஸ்டுடியோ எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். வினோத் குமார் தயாரித்திருக்கிறார்.
செப்டம்பர் 15 ஆம் திகதியன்று தமிழ், தெலுங்கு, மலையாளம் கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் வெளியாகவிருக்கும் இத்திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர ஹொட்டேலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் நடிகர் ஆர்யா, அஷ்டவதானி டி. ராஜேந்தர் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்குபற்றினர்.
படத்தைப் பற்றி விஷால் பேசுகையில், ” இந்தத் திரைப்படத்தில் மார்க் -ஆண்டனி என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளேன். முதன்முறையாக இரண்டு வேடத்தில் நடித்திருக்கிறேன். சயின்ஸ் ஃபிக்சன் டைம் ட்ராவல் படமாக இப்படம் உருவாகியிருக்கிறது. மேலும் 1970 மற்றும் 1990 என இரு வேறு காலகட்டங்களில் நான் லீனியர் பாணியில் மாறி மாறி திரைக்கதை நகரும்.
இது அனைத்து தரப்பு மக்களுக்கும் எளிதாக புரியும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தின் 95 சதவீத படப்பிடிப்பு இரவில் நடைபெற்றது. படப்பிடிப்பின் போது ஏராளமான ஆன்மீக அனுபவங்கள் கிடைத்தது. அது மறக்க இயலாதது. ” என்றார்.
அஷ்டவதானி டி ராஜேந்தர் பேசுகையில், ” இந்தப் படத்திற்காக நான் ஒரு பாடலை பாடியிருக்கிறேன். இந்தப் பாடலை பாடும்போது மிகுந்த பொறுப்புணர்வுடன் ஒரு தலை ராகம் படத்தில் பணியாற்றியதைப் போல் கவனத்துடன் பாடினேன். பாடுவதற்கு முன்பே இசையமைப்பாளர் ஜீ.வி பிரகாஷிடம் என் உடல் நிலை எடுத்துக் கூற. அதற்கு ஏற்ற வகையில் பொருத்தமான அளவிற்கு ஸ்ருதியை கொடுத்து பாட வைத்திருக்கிறார். பாடல் மிகச் சிறப்பாக வந்திருக்கிறது.
விஷாலும் அவருடைய நண்பர் ஆர்யாவும் எம்மை சந்திக்க வருகை தந்தனர். அப்போதே அவரிடம் உங்களது படத்தின் பாடுகிறேன் என்று சம்மதம் தெரிவித்தேன். இந்த திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும். விஷாலுக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமையும்” என்றார்.