நடன இயக்குநரும், நட்சத்திர நடிகருமான ராகவா லோரன்ஸ் நடிப்பில் தயாராகியிருக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் ‘சந்திரமுகி 2’ இதில் ராகவா லோரன்ஸ், பொலிவுட் நடிகை கங்கனா ரனாவத், ‘வைகைப்புயல்’ வடிவேலு, மகிமா நம்பியார், லட்சுமிமேனன், சிருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி மரியா, சுரேஷ் மேனன், சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஒஸ்கர் விருதினை வென்ற இசையமைப்பாளர் எம் எம் கீரவாணி இசையமைத்திருக்கிறார்.
சென்னையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் இப்படத்தின் பிரத்யேக முன்னோட்ட வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பங்குபற்றினர்.
இவ்விழாவில் இயக்குநர் பி வாசு பேசுகையில், ” ‘சந்திரமுகி’ படம் வெளியாகும் போது எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வருகை தந்து திருப்தியுடன் சென்றீர்களோ… அதேபோல் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் ‘சந்திரமுகி 2’ படத்தை காண வாருங்கள். உங்களுக்கு பரிபூரண திருப்தி கிடைக்கும். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
இந்தப் படத்தை பார்க்கும் ரசிகர்கள் அனைவரும் முதலில் ராகவா லோரன்ஸின் நடிப்பை பாராட்டுவீர்கள். அதன் பிறகு கங்கனாவின் சந்திரமுகி கதாபாத்திரத்தை பாராட்டுவீர்கள். செப்டம்பர் 15 ஆம் திகதியன்று சந்திரமுகி 2 வளியாகிறது. அனைவரும் திரையரங்கத்திற்கு வருகைத்தந்து இப்படத்திற்கு ஆதரவளிக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.
நட்சத்திர நடிகர் ராகவா லோரன்ஸ் பேசுகையில், ” இந்தப் படத்தில் பி. வாசுவிற்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. என்னுடைய உடலில் இருந்து ரஜினியின் சாயலை பிரித்தெடுப்பது தான். கடைசி வரை என்னிடமிருந்தும், பி வாசுவிடமிருந்தும். ரஜினியை பிரிக்க முடியவில்லை. படத்தில். வேட்டையன் கதாபாத்திரம் பேசும் வசனம்.
தூய தமிழில் இருந்தது. தூய தமிழில் பேசி நடிக்க வேண்டும் என்றவுடன் முதலில் எனக்கு வரவே இல்லை. பிறகு பல முறை பயிற்சி எடுத்து அந்த வசனத்தை பேசி நடித்தேன். அதனால் இந்த படத்தில் எனது நடிப்பிற்கு கிடைக்கும் அனைத்து, நற்பெயர்களும் இயக்குநர் பி வாசுவிற்கே சமர்ப்பணம்.. ” என்றார்.