‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படப்புகழ் நடிகர் மதூர் மிட்டல் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘800’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இந்தியாவின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான சச்சின் டெண்டுல்கர் வெளியிட்டிருக்கிறார்.
இயக்குநர் எம். எஸ். ஸ்ரீபதி இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் ‘800’. இதில் மதூர் மிட்டல், மகிமா நம்பியார், ‘ஆடுகளம்’ நரேன், நாசர், வேல.ராமமூர்த்தி, ரித்விகா, வடிவுக்கரசி, அருள் தாஸ், ஹரி கிருஷ்ணன், சரத் லோகிதாஸ்வா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். எம்மண்ணின் முன்னாள் சுழற் பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றை தழுவி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மூவி ட்ரெயின் மோஷன் பிக்சர்ஸ் எனும் பட நிறுவனம் தயாரித்திருக்கிறது.
இப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் முன்னோட்டம் இன்று வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை மும்பையில் நடைபெற்ற பிரத்தியேக வெளியீட்டு விழாவில் இந்தியாவின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான சச்சின் டெண்டுல்கர் வெளியிட்டார்.
முன்னோட்டத்தில் இடம்பெற்ற காட்சிகள் சுவாரசியமாகவும், பார்வையாளர்களின் ஆவலை துண்டும் வகையும் இருப்பதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. இதனிடையே இந்த திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.