இந்திய திரையுலகில் முன்னணி இசை அமைப்பாளர்கள் பலரும் தொடர்ந்து திரைப்படங்களுக்கு இசையமைத்து வந்தாலும்.. ரசிகர்களின் ரசனையை அறிந்து கொள்ள அவ்வப்போது நேரலையான மேடை இசை நிகழ்ச்சிகளை நடத்துவது உண்டு. அந்த வகையில் யுவன் சங்கர் ராஜா இம்மாதம் 27ஆம் திகதியன்று சென்னையில் உள்ள ஒய் எம் சி ஏ திறந்த வெளி மைதானத்தில் நேரலையான இசை நிகழ்ச்சியை நடத்துகிறார்.
இது தொடர்பாக யுவன் சங்கர் ராஜா பேசுகையில், ” சென்னையில் நடைபெறும் முதலாவது 360 டிகிரி மேடை வடிவிலான நேரலையான இசை நிகழ்ச்சி இது. இந்தியாவின் இந்திய கலைஞர்களை கொண்டு முதன்முதலாக நடைபெறும் இத்தகைய பாணியிலான இசை நிகழ்ச்சி இது. இதன் மூலம் ரசிகர்களுக்கும், இசை கலைஞர்களுக்கும் இடையேயான நெருக்கம் அதிகமாகும். இது ரசிகர்களுக்கு புதுவிதமான இசை அனுபவத்தை வழங்கும் என நம்புகிறேன்.” என்றார்.
இந்த இசை நிகழ்ச்சியில் யுவன் சங்கர் ராஜாவுடன் ஏராளமான முன்னணி பின்னணி பாடகர்களும், பாடகிகளும் இணைந்து பாடுகிறார்கள். நிகழ்ச்சியில் இடம்பெறும் பாடல்களில் ஐம்பது சதவீதத்திற்கும் மேலான பாடலை யுவன் சங்கர் ராஜா பாடுகிறார்.
இந்த இசை நிகழ்ச்சியை சென்னையைச் சார்ந்த நாய்ஸ் & கிரைன்ஸ் மற்றும் பூமர் ஃபேஷன் ஆகிய நிறுவனங்கள் ஒருங்கிணைத்திருக்கிறது.
சர்வதேச இசை ரசிகர்களுக்கு அறிமுகமான 360 டிகிரி வடிவிலான மேடை அமைப்புடன் நடைபெறும் இந்த நேரலையான இசை நிகழ்ச்சி – இந்தியாவில் முதன்முறையாக சென்னையில் நடைபெறுவதால்… இசை ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.