‘சேத்து மான்’ பட புகழ் குழந்தை நட்சத்திரமான அஸ்வின் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘நாற்கர போர்’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
அறிமுக இயக்குநர் ஸ்ரீ வெற்றி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘நாற்கர போர்’ எனும் திரைப்படத்தில் அபர்னதி, குழந்தை நட்சத்திரம் அஸ்வின், லிங்கேஷ், தமிழரசி, சுரேஷ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அர்ஜுன் ரவி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தினேஷ் அண்டனி இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை வி 6 பிலிம் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். வேலாயுதம் தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வழங்குகிறார்.
அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்காக இப்படம் காத்திருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையில் நடைபெற்ற பிரத்யேக வெளியீட்டு விழாவில் நடிகைகள் நமீதா, கோமல் சர்மா, தொகுப்பாளர் ஆதவன், இயக்குநர்கள் சுப்பிரமணிய சிவா, லெனின் பாரதி, மீரா கதிரவன் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் சிறப்பு அதிதியாக பங்கு பற்றினர்.
இந்நிகழ்வில் இயக்குநர் ஸ்ரீ வெற்றி பேசுகையில், ” தூய்மை பணியாளர்களாக பணியாற்றும் தம்பதியரின் வாரிசு – சதுரங்க ஆட்டத்தில் சர்வதேச வீரராக உருவாகிறார். இதற்காக அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தான் இப்படத்தின் கதை. விளையாட்டு உலகில் நடைபெறும் மறைமுக அரசியலை இந்த படைப்பு உரத்து பேசுகிறது” என்றார்.
‘நாற்கர போர்’ படத்தின் முன்னோட்டத்தில் சதுரங்க விளையாட்டு குறித்தும், அதன் சமூக குறியீடுகள் குறித்தும், விளையாட்டு துறையில் ஆதிக்க வர்க்கத்தின் அரசியல் குறித்தும், காட்சிகள் இடம் பிடித்திருப்பதால்… பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து, படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்திருக்கிறது.