தயாரிப்பு : ஸ்டோரீஸ் பை தி ஷோர்
நடிகர்கள் : விஸ்வத், சுனைனா, நாகா விஷால், காத்தாடி ராமமூர்த்தி, ஜெகன், ராமச்சந்திரன் துரைராஜ் மற்றும் பலர்
இயக்கம் : ஸ்ரீ ராம் அனந்த சங்கர்
மதிப்பீடு : 3/5
தமிழ் சினிமாவில் இதற்கு முன் ஏராளமான ஃபேண்டஸி திரில்லர் திரைப்படங்கள் வருகை தந்து பார்வையாளர்களின் ஆதரவை பெற்று வெற்றியை அளித்திருக்கிறது.
அதிலும் புதுமுக இயக்குநர்களின் இயக்கத்தில் வெளியாகும் ஃபேண்டஸி திரில்லர் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திருக்கிறது.
அந்த வகையில் புது முக இயக்குநர் ஸ்ரீ ராம் அனந்த சங்கரின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ராக்கெட் டிரைவர்’ திரைப்படம் , அனைத்து தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றியதா ?இல்லையா? என்பதனை தொடர்ந்து காண்போம்.
சென்னையில் ஓட்டோ ஒன்றின் சாரதியாக இருக்கிறார் பிரபா. ( விஸ்வத்) ஓட்டோவை இயக்கினாலும் இயற்பியலில் அதுவும் குறிப்பாக ரொக்கெட்டுகளை விண்வெளிக்கு அனுப்பும் வானவியல் சார்ந்த இயற்பியலில் அலாதி பிரியம்.
அத்துடன் முன்னாள் இந்திய குடியரசுத் தலைவரும், அணு விஞ்ஞானியுமான அப்துல்கலாம் அவருக்கு ஒரு முன்மாதிரியான உதாரண புருஷர். மூவருளியுடன் வாகனத்தில் பயணிக்கும் பயணிகளுக்கு சக மனிதர்கள் மீது அன்பும் அக்கறையும் இல்லை என கவலை அடையும் பிரபா ஒரு முறை வாலிப வயது உடைய ஏ பி ஜே அப்துல் கலாமை பயணியாக சந்திக்கிறார்.
அவர் ராமேஸ்வரத்திலிருந்து சென்னை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஒருவரை சந்திப்பதற்காக சென்னைக்கு வருகை தந்திருக்கிறேன் என்கிறார் .
முதலில் அவரை ஏபிஜே அப்துல் கலாம் என நம்ப மறுக்கும் பிரபா அவருடைய தொடர் நடவடிக்கைகள் தோற்றம் பேச்சு அதன் பிறகு நம்பத் தொடங்குகிறார்.
அவர் டைம் ட்ராவல் செய்யத் தொடங்கி தன்னுடைய வாழ்நாளில் இளம் பருவத்திற்கு வருகை தந்திருக்கிறார் என புரிந்து கொள்கிறார்.
அவருக்கு உதவவும் முன் வருகிறார். இதனால் பிரபாவும் , ஏபிஜே அப்துல் கலாமும் சென்னையிலிருந்து ராமேஸ்வரத்திற்கு பயணிக்கிறார்கள்.
அப்துல் கலாமிற்கு தான் ஏன்? இந்த வயதில் இங்கு வருகை தந்திருக்கிறோம் என்பது குறித்த தெளிவான புரிதல் இல்லை. ஆனால் அவருடைய 2015 ஆம் ஆண்டிற்கான நாட்குறிப்பில் ஒரு விடயம் இடம் பிடித்திருக்கிறது.
இந்தத் தருணத்தில் ஏபிஜே அப்துல் கலாம் தன்னுடன் பால்ய வயதில் பழகி, தற்போது முதியவராக இருக்கும் சாஸ்திரியை சந்திக்கிறார்.
அதன் மூலமாக ஏ பி ஜே அப்துல் கலாம் அவருடைய பிறந்த வீட்டுக்கு சென்று தான் எதற்காக இங்கு டைம் டிராவல் செய்து வந்திருக்கிறோம் என தெரிந்து கொள்ள முயற்சிக்கிறார்.
அதன் பிறகு சாஸ்திரியும், ஏபிஜே அப்துல் கலாமும் பால்ய வயதில் பழகும் போது சவரிமுத்து எனும் ஒரு பழைய பொருளை விற்கும் கடை உரிமையாளருக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற முடியவில்லை என்ற விடயம் நினைவுக்கு வருகிறது.
அதன் பிறகு அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக சவரி முத்துவை தேடி நண்பர் சாஸ்திரி மற்றும் பிரபாவுடன் பயணிக்கிறார் ஏபிஜே அப்துல் கலாம்.
அவரது பயணம் நிறைவடைந்ததா? அவரது வாக்குறுதியை நிறைவேற்றினாரா..? ஏபிஜே அப்துல் கலாமின் டைம் ட்ராவல் பயணம் வெற்றிகரமாக நிறைவடைந்ததா? என்பதை விவரிப்பது தான் இப்படத்தின் கதை.
ஒரு ஃபேண்டஸி திரில்லருக்குரிய கதையையும், அதற்குரிய திரைக்கதையையும் நேர்த்தியாக உருவாக்கி இருக்கிறார் இயக்குநர்.
இது போன்றதொரு சிறந்த சிந்தனையை படைப்பாக அளித்ததற்காக இயக்குநருக்கு பூங்கொத்து கொடுத்து பாராட்டலாம்.
இந்த இயக்குநருக்கு மட்டும் இன்னும் நல்லதொரு பட்ஜட்டை ஒதுக்கி இருந்தால் தரமானதாகவும், பிரம்மாண்டமானதாகவும் படைப்பை உருவாக்கி இருப்பார். இருந்தாலும் சிறிய முதலீட்டில் எடுத்த கதையை நேர்த்தியாக விவரித்திருக்கிறார் இயக்குநர்.
இந்த கதையின் வெற்றிக்கு அவர் தெரிவு செய்த கதாபாத்திரங்களும், கதாபாத்திரத்திற்கான நடிகர்களும் மிக முக்கிய காரணம்.
கதையை வழிநடத்திச் செல்லும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் விஸ்வத்தை விட அவரை விட வயதில் மூத்தவராக நடித்திருக்கும் நடிகை சுனைனா வை விட ஏபிஜே அப்துல் கலாமின் இளம் வயது தோற்றத்தில் நடித்திருக்கும் நடிகர் நாகா விஷாலின் தேர்வும், நடிப்பும் பிரமாதம். அதேபோல் ஏபிஜே அப்துல் கலாமின் நண்பர் சாஸ்திரியாக நடித்திருக்கும் மூத்த நடிகர் காத்தாடி ராமமூர்த்தியின் நடிப்பும் சிறப்பு.
படத்தின் முதல் பாதி திரைக்கதை சற்று மெதுவாக சோர்வை தரும் வகையில் நகர்ந்தாலும் இரண்டாம் பாதியில் விறுவிறுப்பும், சுவாரசியமும் இருப்பதால் ரசிகர்களை உற்சாகமூட்டுகிறது.
இதுபோன்ற டைம் டிராவல் பேண்டஸி திரில்லருக்கு ஒளிப்பதிவும், பின்னணி இசையும் உயிர் நாடி. அதனை இந்தப் படத்தில் நேர்த்தியாக வழங்கி தங்களது இருப்பை வெளிப்படுத்திக் கொள்வதுடன் கவனத்தையும் கவர்ந்திருக்கிறார்கள் இசையமைப்பாளர் கௌஷிக் கிரிஷ் மற்றும் ஒளிப்பதிவாளர் ரெஜிமல் சூர்யா தாமஸ்.
ராக்கெட் டிரைவர்- பார்க்க வேண்டிய கலாமின் பொன்மொழி.