தயாரிப்பு : கலா ஃபிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட்
நடிகர்கள் : ஹரிசங்கர், சங்கீதா கல்யாண் , புகழ் மகேந்திரன், சுகுமார் சண்முகம், குரு ராஜேந்திரன், பிரேம்நாத் மற்றும் பலர்.
இயக்கம் : எழில் பெரியவேடி
மதிப்பீடு : 2 /5
எழுத்தாளரும், இயக்குநருமான ராஜு முருகனின் பங்களிப்பு- இப்படத்தின் முன்னோட்டத்தில் இடம் பெற்ற உரையாடல்கள்- என பல்வேறு அம்சங்களினால் ரசிகர்களிடத்தில் படத்தைப் பற்றிய ஆர்வம் அதிகரித்தது. பார்வையாளர்களின் ஆர்வத்தை பராரி பூர்த்தி செய்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.
உலகம் முழுவதும் தமிழர்களாலும், இந்து மதத்தினராலும் அக்னி தலம் என்று போற்றப்படும் திருவண்ணாமலை எனும் புனித நகருக்கு அருகே உள்ள ராஜாபாளையம் எனும் கிராமத்தில் சாதிய பாகுபாடுகளால் மக்கள் பிரிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் தங்களுடைய வாழ்வாதாரத்திற்காக அண்டை மாநிலத்திற்கு புலம்பெயர்கிறார்கள். அங்கு மொழிவாரி பாகுபாடு உண்டாகிறது. அதனால் அவர்களுடைய வாழ்க்கை எவ்வாறு பாதிக்கப்படுகிறது? அதிலிருந்து அவர்கள் மீண்டார்களா? இல்லையா? என்பதுதான் இப்படத்தின் கதை.
தற்போது இந்தியா முழுவதும் மக்களிடையே விரைவாக பரவி இருக்கும் வெறுப்பு அரசியலை மையப் புள்ளியாக கொண்டு இப்படத்தின் கதை எழுதப்பட்டிருக்கிறது. மக்களை அதிகார வர்க்கமும், ஆதிக்க சாதியினரும் எப்படி பிரித்தாள்கிறார்கள் என்பதையும் விவரிக்கிறார்கள்.
பன்றிக்கறி – குடிநீர் விநியோக தடை- என பல்வேறு காரணங்களால் ஆதிக்க சாதியினருக்கும், ஒடுக்கப்பட்ட சாதியினருக்கும் இடையே மோதல்கள் ஏற்படுகிறது. இவர்கள் ஒரு கட்டத்தில் தங்களுடைய வாழ்வாதாரத்திற்காக அண்டை மாநிலமான கர்நாடகாவிற்கு வேலை செய்வதற்காக செல்கிறார்கள். ஏற்கனவே சாதிய பிரச்சனையால் தவிக்கும் இவர்கள் மீது மொழி பாகுபாடு திணிக்கப்படுகிறது. இதன் காரணமாக அவர்கள் மீது ஆதிக்க வர்க்கம் – கட்டற்ற அடக்குமுறையும், வன்முறையை ஏவுகிறது. அதனால் விளிம்பு நிலை மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இறுதியில் அவர் அவர்கள் என்ன முடிவெடுக்கிறார்கள்? என்பதுதான் திரைக்கதை.
பொதுவாக இது போன்ற திரைப்படங்களில் மக்களின் பாதிப்பு அழுத்தமாகவும் விரிவாகவும் காட்சிப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் பார்வையாளர்களிடையே உணர்வெழுச்சியை இயக்குநர் எழுப்புகிறார். இருந்தாலும் இது மட்டும் போதாது என்ற எண்ணத்தையும் ஏற்படுத்துகிறது.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் ஹரிசங்கர் ‘தோழர் வெங்கடேசன்’ படத்திற்குப் பிறகு பண்பட்ட நடிப்பை வழங்கி, ரசிகர்களின் மனதில் எளிதாக இடம் பிடிக்கிறார். அவரை நேசிக்கும் காதலியாக நடித்திருக்கும் நடிகை சங்கீதா கல்யாணின் நடிப்பும் குறை சொல்ல முடியாத அளவில் இருக்கிறது. ஏனையவர்கள் புதியவர்களாக இருப்பதாலும் ..இயல்பாக நடிப்பதாலும் கதைக்கு நம்பகத் தன்மையை ஏற்படுத்துகிறார்கள்.
முதல் பாதியில் வழக்கமான காட்சிகள் இடம் பிடித்ததாலும் கதை எதிர்நோக்கி பயணிக்கிறது என்ற குழப்பம் இருப்பதால் பார்வையாளர்களுக்கு சோர்வு ஏற்படுகிறது. இரண்டாம் பாதியில் எதை சொல்வது… எதை விடுவது… என்று குழம்பி, சமூகம் சார்ந்த அனைத்து கருத்துகளையும் திணித்து பார்வையாளர்களை குழப்புகிறார்கள்.
ஒளிப்பதிவு- பாடல்கள்- இசை -பின்னணி இசை -படத்தொகுப்பு -கலை இயக்கம்+ என அனைத்து அம்சங்களும் அளவாக இருப்பதால் படத்தை ரசிக்க முடிகிறது.
பராரி – கடந்து செல்லும் மேகம்