செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா ஜீப்ரா – திரைப்பட விமர்சனம்

ஜீப்ரா – திரைப்பட விமர்சனம்

2 minutes read

தயாரிப்பு : ஓல்ட் டவுன் பிக்சர்ஸ் & பத்மஜா ஃபிலிம்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்

நடிகர்கள் : சத்ய தேவ், டாலி தனஞ்செயா, சத்யராஜ், ப்ரியா பவானி சங்கர், சுனில் வர்மா, சத்யா, ஜெனிபர் பிகானிடோ உள்ளிட்ட பலர்.

இயக்கம்  : ஈஸ்வர் கார்த்திக்

மதிப்பீடு : 3/5

தெலுங்கு திரையுலகிலிருந்து அண்மைக்காலமாக பான் இந்திய படைப்புகள் அதிகமாக உருவாகி இந்திய அளவிலான ரசிகர்களை கவர்கிறது. அந்த வகையில் தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஜீப்ரா’ எனும் திரைப்படம் வெளியாகி இருக்கிறது.

சர்வைவல் திரில்லர் ஜேனரிலான இந்த திரைப்படம் வழக்கம் போல் பான் இந்திய அளவிலான ரசிகர்களை கவர்ந்திருக்கிறதா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.

தனியார் வங்கி ஒன்றில் ஊழியராக பணியாற்றுகிறார் கதையின் நாயகனான சூர்யா ( சத்யதேவ்) . இவரது காதலியான பிரியா பவானி சங்கரும் அதே வங்கியில் பணியாற்றுகிறார். பணியின் போது கவனக்குறைவாக ஒரு வாடிக்கையாளரின் வங்கி கணக்குக்கு இந்திய மதிப்பில் 4 லட்சம் ரூபாயை வரவு வைத்து விடுகிறார்.

இதனால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் தன்னுடைய பணம் எங்கே? என கேட்க இதனால் சிக்கலுக்குள் மாட்டிக் கொள்ளும் காதலியை காப்பாற்றுவதற்காக நாயகனான சூர்யா தெரிந்தே ஒரு தவறு செய்கிறார். அந்தத் தவறு அவரை மிகப்பெரிய சிக்கலில் சிக்க வைக்கிறது. அதிலிருந்து அவரால் வெளியே வர முடிந்ததா? இல்லையா? என்பதுதான் இப்படத்தின் கதை.

வங்கி சேவை- நிதி மோசடி தொடர்பான கதையாக இருந்தாலும் திரைக்கதையில் எங்கும் பார்வையாளர்களுக்கு சலிப்பு ஏற்படாத வண்ணம் அடுத்தடுத்து சுவாரசியமான திருப்பங்களை ஏற்படுத்திக் கொண்டே கதையை நகர்த்தி செல்கிறார் இயக்குநர்.  அதிலும் பணப்புழக்கம் அதிகம் இருக்கும் வங்கியின் நிதி நடவடிக்கைகள் வங்கிக் கொள்ளை பங்கு சந்தை என அனைத்து விடயங்களையும் இயக்குநர் திரைக்கதையின் சுவராசியத்திற்காக பொருத்தமாக பயன்படுத்தி ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறார்.

கதையின் நாயகன் பல்வேறு சிக்கல்களில் மாட்டிக் கொள்கிறான். ஆனால் அதிலிருந்து எப்படி லாவகமாக கடைசி தருணத்தில் தப்பிக்கிறார் என்பதை விறுவிறுப்பாக காட்சி மொழியாக சொல்லி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்துகிறார் இயக்குநர். அதிலும் உச்சகட்ட காட்சியில் நான்கு நாட்களில் ஐந்து கோடி ரூபாயை சம்பாதிக்க வேண்டும் என்ற நெருக்கடியில் நாயகன் தான் பணியாற்றும் வங்கியை கொள்ளையடிப்பதற்காக போடும் திட்டமும் அதனால் ஏற்படும் பரபரப்பும் ரசிகர்களை இருக்கை நுனிக்கு வரவழைத்து விரல் நகங்களை பதற்றத்தில் கடிக்க வைக்கிறார்கள்.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் தெலுங்கு நடிகர் சத்ய தேவ் – தான் ஏற்று நடித்திருக்கும் கதாபாத்திரத்திற்கு தேவையான உணர்வுகளை நேர்த்தியாக பிரதிபலித்து தேர்ச்சி பெற்ற நடிகர் என்பதை நிரூபிக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் பிரியா பவானி சங்கருக்கு நடிப்பதற்கான வாய்ப்பு குறைவு என்றாலும், கிடைத்த சந்தர்ப்பத்தில் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தனது திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

வில்லன்களாக நடித்திருக்கும் டாலி தனஞ்ஜெயா மற்றும் சுனில் வர்மா ஆகிய இருவரும் தங்களுடைய அனுபவம் மிக்க நடிப்பை வழங்கி ரசிகர்களை கவர்கிறார்கள். சத்யராஜ் எதிர்பாராத ஒரு கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்துகிறார்.

அந்த கதாபாத்திரத்திற்கான ஒப்பனை மற்றும் தோற்றப்பொலிவில் வித்தியாசம் இருந்தாலும் தன் கதாபாத்திரத்தை உணர்ந்து அளவாக நடித்து ரசிகர்களிடம் கைதட்டலை பெறுகிறார் சத்யராஜ்.

ஒரு வங்கியின் செயல்முறை குறித்தும் வங்கியில் உள்ள நிதி ஆதாரங்களுக்கான பாதுகாப்பு குறித்தும் படக்குழுவினர் நிறைய ஆய்வு செய்து பார்வையாளர்களுக்கு சோர்வு ஏற்படாத வகையில் காட்சி மொழியாக விவரித்திருப்பதை பாராட்டலாம்.

இந்த பரபரப்பான திரைக்கதைக்கு ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசை இரண்டும் பக்க பலமாக அமைந்துள்ளது.

பணத்தின் மீது அன்பு கொண்டவர்களும் பணத்தை பாதுகாக்க வங்கி தான் சிறந்த இடம் என்று கருதுபவர்களும் வங்கியில் தங்களுடைய சேமிப்பை சேமித்து வைப்பவர்களும் இந்த ‘ஜீப்ரா’ திரைப்படத்தை பார்த்தால் பல விடயங்கள் புரியவரும். அந்த வகையில் இந்த திரைப்படம் வங்கி பற்றி பொதுமக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் படைப்பு என்றும் குறிப்பிடலாம்.

ஜீப்ரா – அல்ட்ரா ஓ டி பி.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More