தயாரிப்பு : மைத்ரி மூவி மேக்கர்ஸ்
நடிகர்கள் : அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தானா, பகத் பாசில், ராவ் ரமேஷ், ஜெகபதி பாபு, ஸ்ரீ லீலா மற்றும் பலர்.
இயக்குநர் : சுகுமார்
மதிப்பீடு : 3 / 5
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பான் இந்திய திரைப்படமான ‘புஷ்பா 2 -தி ரூல்’ எனும் திரைப்படம் உலகம் முழுவதும் 12,000 க்கும் மேற்பட்ட திரைகளில் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியானது.
வழக்கமாக திரைப்படங்களைப் பற்றி சமூக வலைதள பக்கத்தில் வெறுப்பையும், எதிர்மறை விமர்சனங்களையும் செய்து தொடக்க நாள் வசூலுக்கு வேட்டு வைக்கும் நபர்களின் கழுகு பார்வைக்கு அல்லு அர்ஜுன் – இயக்குநர் சுகுமார் கூட்டணியில் உருவான இந்த திரைப்படம் தப்பியதா? இல்லையா? என்பதையும், இந்த திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.
‘புஷ்பா’ படத்தின் முதல் பாகத்தில் செம்மரம் கடத்தும் நாயகன் அல்லு அர்ஜுனுக்கும், அதனை தடுப்பதற்காக காவல்துறை அதிகாரியாக நியமிக்கப்பட்ட பகத் பாசிலுக்கும் இடையேயான பகையை முதல் பாகத்தின் இறுதியில் முத்தாய்ப்பாக வைத்திருப்பார்கள்.
அந்தப் பகை இரண்டாம் பாகத்தில் எப்படி நிறைவு பெற்றது என்பதையும், தன்னுடைய ஆசை மனைவி – காதல் மனைவி – அன்பு காட்டும் மனைவி- ராஷ்மிகாவின் சின்ன ஆசையை நிறைவேற்றுவதற்காக மாநில முதல்வரை சந்திக்க விரும்புகிறார் செம்மர கடத்தலில் தலைவனாக உயர்ந்திருக்கும் புஷ்பராஜ். தன்னுடன் புகைப்படம் எடுக்கும் புஷ்பராஜ் செம்மர கடத்தல் மன்னன் என்பதை தெரிந்தவுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள மறுப்பு தெரிவிக்கிறார் முதல்வர் ( ‘ஆடுகளம்’ நரேன்). இதனால் அவமானத்தை எதிர்கொள்ளும் புஷ்பராஜ் முதல்வரையே மாற்ற விரும்புகிறார் சபதம் எடுக்கிறார்.
இதற்காக வழக்கமான அளவைவிட கூடுதலாக 2000 டன் செம்மர கட்டைகளை கடத்த திட்டமிடுகிறார். இதனை மோப்பம் பிடித்த பகத் பாஸில் அதை தடுத்தாரா? இல்லையா? என்பதும் அதனைக் கடந்து, அதனை எப்படி கடத்தி தான் விரும்பிய ஒருவரை முதல்வர் ஆக்கினார் என்பதும் இரண்டாம் பாகத்தில் கதையாக சொல்லப்பட்டிருக்கிறது.
இதனுடன் கிளை கதையாக தன்னுடைய பிறப்பு குறித்த அடையாளத்தை எப்படி அங்கீகாரமாக மாற்றிக் கொள்கிறார் என்பதையும் உணர்வுபூர்வமாக இயக்குநர் விவரித்திருக்கிறார். அத்துடன் இப்படத்தின் அடுத்த பாகத்திற்கான விதையையும் விதைத்திருக்கிறார் இயக்குநர்.
படத்தில் பலமாகவும், பலவீனமாகவும் இருப்பது நீளம் தான். ஏறக்குறைய மூன்று மணி நேரம் 20 நிமிடம் வரை நீளும் இந்த திரைப்படத்தின் முதல் பாகத்தில் அல்லு அர்ஜுனுக்கும், பகத் பாசிலுக்கும் இடையேயான எலி -பூனை மோதல் சுவராசியமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
இது தொடர்பான காட்சிகளில் எதிர்பாராத திருப்பங்களும், அதனை காட்சிப்படுத்திய விதத்தில் பிரமிப்பும், பிரம்மாண்டமும் இருப்பதால் ரசிகர்கள் இருக்கையில் உற்சாகத்துடன் அமர்ந்து இருக்கிறார்கள். இருப்பினும் இடையிடையே வரும் ராஷ்மிகா – அல்லு அர்ஜுன் இடையேயான தாம்பத்திய வாழ்க்கை சற்று ‘ஏ’ த்தனமாக இருப்பதால் ஒரு பிரிவு ரசிகர்களை மட்டும் உற்சாகப்பட வைக்கிறது.
சண்டைக் காட்சிகளில் ஒட்டுமொத்த படக் குழுவினரும் தங்களுடைய கடினமான உழைப்பை வழங்கி, ரசிகர்களின் கண்களை அகல விரித்து ஆச்சரியப்பட வைக்கிறார்கள்.
படத்தின் தொடக்கக் காட்சியில் ஜப்பானில் வில்லன்களுடன் நாயகன் மோதும் காட்சி பல சீன திரைப்படங்களின் சண்டைக் காட்சிகள் நினைவூட்டினாலும் ரசிக்க முடிகிறது.
அதைத்தொடர்ந்து உச்சகட்ட காட்சியில் நாயகனின் கையையும் காலையும் கட்டிவிட்டு வில்லன்களுடன் மோதும் சண்டை காட்சியும் கவனம் பெறுகிறது.
புஷ்பராஜ் கதாபாத்திரத்தை சுப்பர் ஹீரோ கதாபாத்திரத்திற்கு நிகராக எழுதியிருக்கிறார் இயக்குநர்.
ஆனால் புஷ்பராஜ் செய்யும் செம்மர கடத்தலுக்கு தடையாக இருக்கும் நேர்மையான காவல்துறை அதிகாரி ஷெகாவத் கதாபாத்திரத்தை தொடர் தோல்விகளால் பாதிக்கப்படும் காவல்துறை அதிகாரிகள் உளவியல் ரீதியாக பலவீனம் அடைந்து தங்களின் தோல்வியை ஒப்புக்கொள்கிறார்கள் என வடிவமைத்திருப்பதில் ஒரு விதமான எஸ்கேபிசம் பாணியே தெரிகிறது.
புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தை வழிநடத்திச் செல்லும் கதாபாத்திரமாக ராஷ்மிகா கதாபாத்திரம் எழுதப்பட்டிருந்தாலும்.. போதிய அழுத்தமில்லாமல் இருக்கிறதோ..! என்ற எண்ணத்தை பார்வையாளர்களிடத்தில் ஏற்படுத்துகிறது. இருப்பினும் அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் ராஷ்மிகா தன்னால் இயன்ற அளவு கவர்ச்சியையும், நடிப்பையும் வழங்கி ரசிகர்களை திருப்தி படுத்துகிறார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நடிகை ஸ்ரீ லீலா தோன்றும் பாடல் காட்சி பாரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும் ரசிகர்களை உறுத்தாமல் கடந்து செல்வதால் தப்பிக்கிறது.
செம்மரம் கடத்துவதற்காக நாயகன் போடும் திட்டங்களும், அதனை தடுப்பதற்காக காவல்துறை அதிகாரி போடும் திட்டங்களும் பரபர. இந்தக் காட்சிகளில் ஒளிப்பதிவாளரும் பின்னணி இசையமைப்பாளரும் ரசிகர்களை பதற வைக்கிறார்கள்.
‘புஷ்பா 2’ படத்தின் ஒட்டுமொத்த சுமையையும் தன் தோளில் ஒற்றை ஆளாக அனாயசமாக சுமந்து தான் ஒரு ‘வைல்ட் ஃபயர்’ என்பதை நிரூபிக்கிறார் அல்லு அர்ஜுன். நடனத்தில் மட்டுமல்ல நடிப்பிலும் ரசிகர்களை கவர்கிறார்.
பாடல் காட்சிகள் பட மாளிகையில் மட்டும் ரசிக்கும் அனுபவத்தை வழங்குகிறது. பின்னணி இசை இரைச்சல் இல்லாமல் இருப்பதற்காகவே பாராட்டலாம். தெலுங்கு திரைப்படமாக இருந்தாலும் தமிழில் டப்பிங் நேர்த்தியாக செய்து ரசிகர்களை திருப்தி படுத்துகிறார்கள் படக் குழுவினர்.
இயக்குநர் சுகுமார் – நடிகர் அல்லு அர்ஜுன் கூட்டணி இணைந்தால் பிளாக் பஸ்டர் ஹிட் என்பதை மீண்டும் படத்தின் மூலம் பான் இந்திய அளவில் நிரூபித்திருக்கிறார்கள்.
புஷ்பா 2 – தி ரூல் – லாஜிக் 0% பொழுதுபோக்கு 100%