தமிழ் திரையுலகில் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக நகைச்சுவை நடிகராக கோலோச்சும் கவுண்டமணி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ஒத்த ஓட்டு முத்தையா’ எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இயக்குநர்கள் கே. பாக்யராஜ் – பி. வாசு மற்றும் தயாரிப்பாளர் கே. ராஜன் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர்.
கவுண்டமணி நடித்த படங்களில் ஐம்பதிற்கும் மேற்பட்ட படங்களுக்கு நகைச்சுவை பகுதியை எழுதிய எழுத்தாளரான சாய் ராஜகோபால் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஒத்த ஓட்டு முத்தையா’ எனும் திரைப்படத்தில் கவுண்டமணி, யோகி பாபு, தம்பி ராமையா, மொட்டை ராஜேந்திரன், வாசன் கார்த்திக், கஜேஷ், அன்பு மயில்சாமி, ஹீமா பிந்து, சாய் தன்யா, அபர்ணா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
சா. காத்தவராயன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தை சினி கிராஃப்ட் புரொடக்ஷன் குட்டி ஸ்டோரி பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ரவி ராஜா மற்றும் கோவை லட்சுமி ராஜன் ஆகிய இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
எதிர்வரும் 14-ஆம் திகதி காதலர் தினத்தன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னை கமலா படமாளிகை வளாகத்தில் நடைபெற்ற பிரத்யேக வெளியீட்டு நிகழ்வில் இயக்குநர்கள் கே. பாக்யராஜ் – பி. வாசு, தயாரிப்பாளர் கே .ராஜன் ஆகியோ சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றினர்.
இந்நிகழ்வில் கவுண்டமணி பேசுகையில், ” இயக்குநர் ராஜகோபால் என் நண்பர். அவர் போனில் சொன்ன கதையை கேட்டு, பிடித்துப் போய் நடித்திருக்கிறேன்.
அனைவரும் ரசிக்கும் வகையில் இந்த படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தை சிறப்பாக தயாரித்ததற்காக தயாரிப்பாளர்களுக்கும், இயக்கியதற்காக இயக்குநருக்கும் , நடித்ததற்காக சக நடிகர்கள் அனைவருக்கும், சிறப்பாக பணியாற்றியதற்காக தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த விழாவிற்கு வருகை தந்திருக்கும் ரசிகர்கள் …வருகை தராமல் வீட்டில் இருக்கும் ரசிகர்கள்!வெளியூரில் இருக்கும் ரசிகர்கள்!வெளிநாட்டில் இருக்கும் ரசிகர்கள்! ஹொலிவுட்டில் இருக்கும் ரசிகர்கள்!. என அத்தனை பேருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த ஒத்த ஓட்டு முத்தையாவை பாருங்கள். இந்த ஒத்த ஓட்டு முத்தையாவை நன்றாக பாருங்கள். இந்த ஒத்த ஒட்டு முத்தையாவை திரும்பத் திரும்ப பாருங்கள். நான் திரும்பவும் சொல்கிறேன். ஒத்த ஒட்டு முத்தையாவை பாருங்கள். திரும்பத் திரும்ப சொல்கிறேன்.
ஒத்த ஓட்டு முத்தையாவை பாருங்கள். திரும்பிப் பார்த்துவிட்டும் சொல்கிறேன். ஒத்த ஓட்டு முத்தையாவே பாருங்கள். பார்க்க மறந்து விடாதீர்கள். இந்த ஒத்த ஒட்டு முத்தையாவை வெற்றி ஓட்டு முத்தையாவாக மாற்றுங்கள். அது உங்கள் கடமை. அது உங்களுடைய பொறுப்பும் கூட.” என்றார்.
இதனிடையே நடிகர் கவுண்டமணி சிறிய இடைவெளிக்கு பிறகு கதையின் நாயகனாக நடித்திருப்பதால் ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்திற்கு ரசிகர்களிடத்திலும் திரையுலக வணிகர்களிடத்திலும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.