‘ஜெய் பீம்’ புகழ் நடிகை லிஜோமோல் ஜோஸ் கதையின் நாயகியாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ஜென்டில்வுமன்’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையில் நடைபெற்ற பிரத்யேக நிகழ்வில் இயக்குநர்கள் த. செ. ஞானவேல்- ராஜுமுருகன்- லெனின் பாரதி -ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றி முன்னோட்டத்தை வெளியிட்டனர்.
அறிமுக இயக்குநர் ஜோசுவா சேதுராமன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜென்டில்வுமன்’ எனும் திரைப்படத்தில் லிஜோமோல் ஜோஸ், லொஸ்லியா, ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சா. காத்தவராயன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார்.
கதையின் நாயகிக்கு முக்கியம் அளித்திருக்கும் இந்த திரைப்படத்தை கோமளா ஹரி பிக்சர்ஸ் மற்றும் ஒன் ட்ராப் ஓசன் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் கோமளா ஹரி- ஹரி பாஸ்கரன்- பி. என். நரேந்திர குமார்- லியோ லோகம் நேதாஜி – ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
எதிர்வரும் மார்ச் மாதம் ஏழாம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் ‘ஜென்டில்வுமன்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதற்காக சென்னையில் நடைபெற்ற பிரத்யேக நிகழ்வில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் ராஜுமுருகன் -லெனின் பாரதி -த. செ. ஞானவேல் -ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றினர்.
இந்நிகழ்வில் இயக்குநர் ராஜு முருகன் பேசுகையில், ” கலாச்சாரம் என்ற போர்வையில் பெண்களை புனித படுத்துதல் தான் இந்த சமூகத்தில் நடைபெறுகிறது. பெண்களை புனித படுத்த வேண்டாம். நம்மை போல் உணர்வுள்ள சக மனுசியாக மதித்தால் போதும் என்பதை இப்படம் வலியுறுத்துகிறது.
இந்தத் திரைப்படம் பெண்களைப் பற்றி காலம் காலமாக கற்பிக்கப்பட்டு வரும் கற்பிதங்களை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று உணர்த்துகிறது. இது போன்ற துணிச்சல் மிக்க படைப்புகளை ரசிகர்கள் ஆதரிக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.