ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி நட்ராஜ், நடன இயக்குநரும், நடிகருமான சாண்டி , நட்சத்திர நடிகரான ரியோ ராஜ் இவர்களுடன் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா ஆகிய நால்வரும் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் ‘நிறம் மாறும் உலகில்’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையில் நடைபெற்ற பிரத்யேக விழாவில் “பிக் பொஸ்” முத்துக்குமரன் மற்றும் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றினர்.
அறிமுக இயக்குநர் ஜெ. பி. பிரிட்டோ இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நிறம் மாறும் உலகில் ‘ எனும் திரைப்படத்தில் பாரதிராஜா, நட்டி நட்ராஜ், ரியோ ராஜ், சாண்டி, சுரேஷ் சக்கரவர்த்தி, சுரேஷ் மேனன், வடிவுக்கரசி, கனிகா, துளசி, லிசி அண்டனி, மைம் கோபி, ‘ஆடுகளம்’ நரேன், விஜி சந்திரசேகர், நமோ நாராயணன், ஏகன், விக்னேஷ் காந்த், ரிஷி காந்த் , நிவாஸ் ஆதித்தன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மல்லிகார்ஜுன் – மணிகண்ட ராஜா ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் தேவ் பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை சிக்னேச்சர் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜி எஸ் சினிமா இன்டர்நேஷனல் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் மார்ச் மாதம் ஏழாம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் இடம்பெறும் காட்சிகளுக்கு கதையின் நாயகர்களில் ஒருவராக நடித்திருக்கும் நட்டி நட்ராஜ் பின்னணி குரல் கொடுத்திருப்பது ரசிகர்களை வசப்படுத்தி இருக்கிறது.
இதற்காக நடைபெற்ற பிரத்யேக வெளியீட்டு விழாவில் பங்கு பற்றி இயக்குநர் பேசுகையில், ” அம்மாவை வைத்து இதற்கு முன் ஏராளமான திரைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. ஆனால் அவற்றிலிருந்து இந்த திரைப்படம் முற்றிலும் வித்தியாசமானதாக இருக்கும். இந்த கதை மீதான நம்பிக்கையின் காரணமாகத்தான் இப்படத்தில் அனைத்து நட்சத்திரங்களும் நடிக்க சம்மதம் தெரிவித்தார்கள். இந்தக் கதை ஒரு நரேட்டிவ் பாணியில் சொல்லப்பட்டிருக்கும் கதை. இதன் உச்சகட்ட காட்சி யாரும் யூகித்திருக்க இயலாது. இதை படத்தை பார்த்த அனைவரும் உணர்வார்கள். ரசிப்பார்கள். இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும்” என்றார்.