இந்திய அளவிலான ரசிகர்களை கொண்டிருக்கும் ஆர். மாதவன் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘டெஸ்ட்’ எனும் தமிழ் திரைப்படம் நெட்பிளிக்ஸ் டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் திகதி அதிகாரப்பூர்வமாக பிரத்யேக புகைப்படத்துடன் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தயாரிப்பாளராக இருந்து இயக்குநராக அறிமுகமாகும் எஸ். சசிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ டெஸ்ட்’ எனும் திரைப்படத்தில் ஆர். மாதவன், நயன்தாரா, சித்தார்த், மீரா ஜாஸ்மின் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விராஜ் சிங் கோஹில் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சக்தி ஸ்ரீ கோபாலன் இசையமைத்திருக்கிறார். துடுப்பாட்ட மைதானம், துடுப்பாட்ட வீரர்களின் வாழ்வியலின் பின்னணியில் திரில்லர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வை நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
அனைத்து பணிகளும் நிறைவடைந்த இந்த திரைப்படம் பட மாளிகையில் வெளியாகாமல் நேரடியாக முன்னணி டிஜிட்டல் தனமான நெட்பிளிக்சில் வெளியாகிறது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் உள்ள இந்த திரைப்படம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் நான்காம் திகதியன்று வெளியாகிறது என பட குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.
படத்தை பற்றி இயக்குநர் பேசுகையில், ” துடுப்பாட்ட வீரர், விஞ்ஞானி, ஆசிரியர், ஆகிய மூவரின் வாழ்வியலில் நடைபெறும் உணர்வு பூர்வமான தருணங்களை தான் இப்படத்தின் திரைக்கதையாக உருவாக்கப்பட்டிருக்கிறது. விளையாட்டில் கடினமான தருணங்களில் மேற்கொள்ளும் முடிவு என்பது மறக்க முடியாதது. அந்த முடிவு நேர்நிலையாகவோ அல்லது எதிர்மறையாகவோ விளைவை ஏற்படுத்தும். இந்த திரைப்படம் விளையாட்டில் எடுக்கும் முடிவுகளை மட்டுமல்ல வாழ்க்கையில் ஏற்படும் நெருக்கடியான தருணங்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் விவரிக்கிறது” என்றார்.
இதனிடையே நயன்தாரா, மாதவன், சித்தார்த், மீரா ஜாஸ்மின், ஆகியோர் இணைந்து நடித்திருப்பதாலும் துடுப்பாட்டத்தை பற்றிய படமாக இருப்பதாலும் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.