யாரிப்பு : இம்ப்ரஸ் ஃபிலிம்ஸ் & மெட்ரோ புரொடக்ஷன்ஸ்
நடிகர்கள் : சத்யா, ஜெயபிரகாஷ், தீபா, டேனியல் அனி போப், சென்ராயன், ‘ராஜா ராணி’ பாண்டியன் மற்றும் பலர்
இயக்கம் : எஸ். எம். பாண்டி
மதிப்பீடு : 2.5 / 5
‘மெட்ரோ ‘ எனும் திரைப்படத்தினை இயக்கி ரசிகர்களின் கவனத்தை கவர்ந்த இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் கதை, திரைக்கதை எழுதி இருக்கும் இந்த’ ராபர் ‘ திரைப்படத்தை அறிமுக இயக்குநர் எஸ். எம். பாண்டி இயக்கியிருக்கிறார்.
தங்க நகை பறிப்பு மற்றும் வழிப்பறி கொள்ளையில் ஈடுபடும் ஒருவனின் வாழ்வியலை கிரைம் திரில்லராக விவரிக்கும் இந்த திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.
கதையின் நாயகனான சத்யா பிறந்த மண்ணிலிருந்து வாழ்வாதாரத்திற்காக சென்னைக்கு வருகிறான். அங்கு தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிக்கு சேர்கிறான்.
தனியார் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டே பகுதி நேரமாக தன்னுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்வதற்காக தங்க நகை சங்கிலி பறிப்பில் ஈடுபடுகிறான்.
இத்தகைய குற்றச் செயலில் ஈடுபடும்போது காவல்துறை – பொதுமக்கள் – கண்காணிப்பு கமெரா- புகார் தராத மக்கள்- என துல்லியமாக அவதானித்து வழிப்பறியில் ஈடுபடுகிறார். அத்துடன் சட்ட விரோதமான முறையில் கொள்ளையடித்த நகைகளை பணமாக மாற்றும் கும்பலுடனும் தொடர்பை ஏற்படுத்திக் கொள்கிறான்.
எப்போதும் தன்னுடைய தோற்றத்தை வெளிப்படுத்தாமல் குற்றச் செயலில் ஈடுபடும் கதையின் நாயகன்.. ஒரு முறை ஒரு பெண்ணிடம் வழிப்பறியில் ஈடுபடும் போது அந்தப் பெண் துணிச்சலுடன் இவனை பின் தொடர்கிறாள்.
ஆனால் எதிர்பாராத விதமாக விபத்தில் அவள் மரணம் அடைகிறார். இது தொடர்பாக காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரிக்க தொடங்குகிறது.
முழுமையான ஆதாரம் இல்லாததால் குற்றவாளிக்கு சட்டபூர்வமான தண்டனை கிடைக்கவில்லை. ஆனால் அந்தப் பெண்ணின் தந்தை.. தன்னுடைய மகளின் வாழ்க்கையை அழித்த அந்த குற்றவாளியை தண்டிக்க தீர்மானிக்கிறார். அவரால் அது முடிந்ததா? இல்லையா? என்பதுதான் படத்தின் கதை.
கதையின் நாயகனாக நடிகர் சத்யா ‘மெட்ரோ’ படத்தில் நடித்திருந்தாலும், இந்த படத்தில் தன் முழு திறமையையும் வெளிப்படுத்தி நடித்திருக்கிறார். சொகுசான வாழ்க்கை… விரும்பிய வாழ்க்கையை வாழ்வதற்கு பணம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்றும், அதற்காக தவறான வழியில் சென்று பணம் ஈட்டுவது தவறல்ல என்றும்.. அந்தக் கதாபாத்திரம் கதையில் பயணிக்கும் போதே உச்சகட்ட காட்சி எது என்பதையும், என்ன என்பதையும் ரசிகர்களால் எளிதாக ஊகித்து விட முடிகிறது. ஆனால் யாரால் அது நிகழும்? என்ற எதிர்பார்ப்பை மட்டும் உச்சகட்ட காட்சி வரை பரபரப்பாக அழைத்துச் செல்கிறார் இயக்குநர்.
வழிப்பறி திருடர்கள் – திருட்டு நகையை விற்று சம்பாதிக்கும் கும்பல் – காவல்துறையின் மெத்தனமான விசாரணை- திரைக்கதையின் சுவாரசியத்திற்காக கண்காணிப்பு கமெராவின் பலவீனமான நிலை குறித்த புள்ளிவிவரங்கள் – குற்றவாளிகளின் புத்திசாலித்தனம் – இப்படி நிறைய அம்சங்கள் இருந்தாலும்… படத்தின் ஒளிப்பதிவும், பின்னணி இசையும் ரசிகர்களை ஓரளவு இருக்கையில் அமர செய்கிறது.
குற்ற செயலில் ஈடுபட்டு ருசி கண்டவர்கள் உளவியல் ரீதியாக வலிமை பெற்று, உறவு மேலாண்மையில் தடுமாறுவார்கள் என்பதை வெளிச்சம் போட்டு காட்டி இருக்கும் ராபரையும் – திருடரையும்.. இவர்களுக்கு சமூக அமைதியை காப்பதில் உறுதிப் பூண்டிருக்கும் தாய்மார்கள் எடுக்கும் முடிவையும் பாராட்டலாம்.
ராபர் – உள்ளம் கவராத கள்வன்.