தயாரிப்பு : டேர்ம் புரொடக்ஷன்ஸ்
நடிகர்கள் : விவேக் பிரசன்னா, சாந்தினி தமிழரசன், ஆனந்த் நாக், பூர்ணிமா ரவி, பிரதோஷ், நிழல்கள் ரவி, வையாபுரி மற்றும் பலர்.
இயக்கம் : தம்பித்துரை மாரியப்பன்
மதிப்பீடு : 2/5
ஹைப்பர் லிங்க் ஆந்தாலஜி பாணியிலான திரைப்படங்களுக்கு ரசிகர்களிடம் வரவேற்பு உண்டு. ஆனால் இதன் திரைக்கதை – படத்தொகுப்பு அடர்த்தியாகவும் , வீரியமிக்கதாகவும் ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு அப்பாற்பட்டதாகவும் இருந்தால் பாரிய வெற்றியை பெறும். இந்நிலையில் இந்த பாணியில் தயாராகி இருக்கும் ‘ட்ராமா’ எனும் திரைப்படம் ரசிகர்களை கவர்ந்திருக்கிறதா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.
சுந்தர்( விவேக் பிரசன்னா) – கீதா ( சாந்தினி தமிழரசன்) தம்பதிகள் ஒரு கதை- இவர்களுக்கு திருமணம் ஆகி நான்கு ஆண்டுகளாகியும் குழந்தை பேறு இல்லாதவர்கள். வாரிசுக்காக ஏங்குபவர்கள்.
ஜீவா( பிரதோஷம்) – செல்வி ( பூர்ணிமா ரவி) காதலர்கள்- இது ஒரு கதை. காதலிக்கும் போது நெருங்கி பழகிய பிறகு, காதலன் புதிரானவன்!! என்பதால் காதலனை இழக்கவும் தயாராகிறார்.
தங்களுடைய வாழ்வாதாரத்திற்காக சிறிய அளவிலான திருட்டுகளில் ஈடுபடும் இரண்டு திருடர்கள் – இது ஒரு கதை
இந்த மூன்று கதையையும் ஒரு புள்ளியில் இணைப்பது தான் இப்படத்தின் திரைக்கதை.
சுந்தர் தான் ஆண்மையற்றவன் என்பதையும், குழந்தை பெற்றுக் கொள்வதற்கு தகுதியற்றவன் என்ற வைத்திய ரீதியிலான உண்மையையும் மனைவியிடம் பகிரங்கமாக ஒப்புக்கொள்ள தயாராக இல்லை. இதனை தன்னுடைய நண்பர் ரகு( ஆனந்த் நாக்) விடமும் பகிர்ந்து கொள்கிறார். மேலும் இது தொடர்பாக செயன்முறை கருத்தரிப்பு முறையில் சிகிச்சையை பெற விரும்புகிறார்.
பெற்றோல் விநியோகிக்கும் நிலையம் ஒன்றில் ஊழியராக பணியாற்றுகிறார் செல்வி. இவரை விரட்டி விரட்டி காதலிக்கிறார் ஜீவா. ஒரு புள்ளியில் செல்வியை ஜீவா காப்பாற்ற.. அதனால் அவர் மீது நம்பிக்கை வருவதுடன் காதலையும் வளர்த்துக் கொள்கிறாள் செல்வி. இந்த காதலர்கள் அத்து மீறுகிறார்கள். அதனால் செல்வி கருவுறுகிறாள். இந்த விடயம் அவருடைய பெற்றோர்களுக்கு தெரிய வர..’ உயிரை விட மானம் பெரிது ‘ என வாழும் அவர்கள், செல்வியிடம் கருகலைப்பு செய்து கொள்ளுமாறு நிர்பந்திக்கிறார்கள்.
சிறிய அளவில் திருட்டுகளில் ஈடுபடும் இரண்டு நண்பர்களிடத்தில், மெக்கானிக் ஒருவர் ( ஈஸ்வர்) பெரிய அளவில் திருட்டில் ஈடுபடுங்கள் என்று ஆசையை தூண்டுகிறார். இதனால் அவர்கள் சொகுசு கார் ஒன்றை திருடுகிறார்கள். இதனால் அவர்கள் காவலர்களிடம் சிக்கிக் கொள்கிறார்கள். விசாரணையின் போது இந்த அனைத்து கதைகளுக்குமான பின்னணி விவரிக்கப்படுகிறது. வைத்திய உலகில் குறிப்பாக மகப்பேறின்மைக்கான வைத்தியத்தில் இன்று மோசடிகள் அதிகமாகிவிட்டது என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக எழுதப்பட்டிருக்கும் இந்த கதை ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமே பிடிக்கும்.
இதில் குழந்தை இல்லா தம்பதிகளாக நடித்திருக்கும் விவேக் பிரசன்னா – சாந்தினி தமிழரசன் ஜோடி- தங்களுடைய அனுபவம் மிக்க நடிப்பை வழங்கி மனதில் இடம் பிடிக்கிறார்கள். சுந்தரின் நண்பன் ரகு கதாபாத்திரம் – ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ற வகையில் இருப்பதால், எந்த சுவராசியத்தையும் ஏற்படுத்தவில்லை. இருந்தாலும் அந்த கதாபாத்திரத்தில் நடிகர் ஆனந்த் நாக் நன்றாக நடித்திருக்கிறார்.
இவர்கள் அனைவரையும் விட செல்வி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பூர்ணிமா ரவி அற்புதமாக நடித்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் யார் இவர்? என கேள்வி எழுப்புகிறார். தனித்துவமான நடிப்பை வழங்கி கவனிக்க வைக்கிறார் பூர்ணிமா ரவி. இவருக்கு வளமான எதிர்காலம் தமிழ் சினிமாவில் உண்டு என்று உறுதியாக சொல்லலாம்.
இதுபோன்ற ஆந்தாலஜி படைப்புகளுக்கு படத்தொகுப்பு தான் பலம். அதனை இந்த திரைப்படத்தில் நேர்த்தியாக செய்திருக்கிறார் படத்தொகுப்பாளர் முகன் வேல். சிறிய முதலீட்டு திரைப்படமாக இருந்தாலும் ஒளிப்பதிவாளர் அஜித் ஸ்ரீனிவாசனும், இசையமைப்பாளர் ஆர். எஸ். ராஜ் பிரதாப்பும் தங்களுடைய பங்களிப்பை நேர்த்தியாக வழங்கி ரசிகர்களுக்கு ஆறுதல் அளிக்கிறார்கள்.
ட்ராமா – கோமா.