கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் ‘சர்தார் 2’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி, இரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘சர்தார்’. தீபாவளியை முன்னிட்டு வெளியான இத்திரைப்படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது. இதில் லைலா, ரஜிஷா விஜயன், ராஷி கண்ணா, யூடியூப் பிரபலம் ரித்விக் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார்.
தேசத்துரோகி என்று முத்திரை குத்தப்பட்ட உளவாளி, உண்மையில் தேசநலனுக்காக எத்தகைய தியாகங்களைச் செய்கிறார் என்பதே இத்திரைப்படத்தின் கதை. இதில் அப்பா- மகன் என இரட்டை வேடத்தில் கார்த்தி நடித்திருந்தார்.
இந்நிலையில், சர்தார் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாவது குறித்து ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, ‘சர்தார் 2’ திரைப்படம் தற்போது உருவாகி வருகிறது.
இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன், பிரியங்கா மோகன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சென்னை, மைசூர் உள்ளிட்ட பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை இன்று காலை படக்குழு வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
அதில், கார்த்தி சீனர்களுடன் சண்டை இடுகிறார்.
அப்போது அதில் சீன நபர் கார்த்தியிடம், ‘உன் நாட்டை நோக்கி ஒரு பிரளயம் வந்துட்டு இருக்கு’ என சொல்ல எஸ்.ஜே.சூர்யா கதாபாத்திரம் அறிமுகமாகின்றது. பின்பு கார்த்தி, அந்த சீன நபரிடம் ‘போர்னு வந்துட்டா உயிராவது…’ என்று சொல்கிறார். இதனால் இப்படம் எஸ்.ஜே.சூர்யா மற்றும் கார்த்தி இருவருக்கும் இடையில் நடக்கும் பின்னணியைக் கொண்டு நகரும் என யூகிக்கப்படுகிறது.