தயாரிப்பு : வை நாட் ஸ்டுடியோஸ்
நடிகர்கள் : மாதவன், சித்தார்த், நயன்தாரா, மீரா ஜாஸ்மின், ‘ஆடுகளம்’ முருகதாஸ், காளி வெங்கட், வினய் வர்மா மற்றும் பலர்.
இயக்கம் : சசிகாந்த்
மதிப்பீடு : 2.5 / 5
தயாரிப்பாளராக இருந்த சசிகாந்த் இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கும் திரைப்படம் – மாதவன் + சித்தார்த் + நயன்தாரா + முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் – துடுப்பாட்ட பின்னணியிலான படம் – பட மாளிகையில் வெளியாகாமல் நேரடியாக டிஜிட்டல் தளத்தில் வெளியாகி இருக்கும் படம்- இப்படி பல சிறப்பம்சங்களை கொண்டிருக்கும் ‘டெஸ்ட்’ திரைப்படம் – டிஜிட்டல் தள ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.
அர்ஜுன் வெங்கட்ராமன் ( சித்தார்த் ) இந்திய துடுப்பாட்ட அணியில் நட்சத்திர வீரராக இருக்கிறார். கடந்த இரண்டு பருவங்களாக அவருடைய துடுப்பாட்டம் சிறப்பானதாக இல்லை என நிர்வாகம் கருதுகிறது.
அதனால் அவரை ஓய்வு எடுக்கும்படி வற்புறுத்துகிறது. இது தொடர்பான உத்தியோகபூர்வமான அறிவிப்பை வெளியிடும் படி நெருக்கடி கொடுக்கிறது. ஆனால் துடுப்பாட்டத்தில் இருந்து விடைபெறும் போது வெற்றியுடன் தான் விடைபெறுவேன் என உறுதி காட்டுகிறார் அர்ஜுன். இதற்காக இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெறும் டெஸ்ட் தொடரில் நட்சத்திர வீரராக பங்கு பற்றி அணியின் வெற்றிக்கு பாடுபடுவேன் என்கிறார்.
ஆனால் இவரது கோரிக்கையை நிர்வாகம் ஏற்றதா? இல்லையா? அவரால் இந்திய அணியில் விளையாடும் வீரர்களின் பிரிவில் இடம் பிடிக்க முடிந்ததா? இல்லையா? மைதானத்தில் அவர் இந்திய அணியை வெற்றி பெற செய்தாரா? இல்லையா? இது ஒரு கதை.
வாகனங்களுக்கான இயந்திரவியல் துறையில் முதுகலை பட்டப் படிப்பு படித்துவிட்டு அமெரிக்காவில் பணியாற்றி விட்டு இந்தியாவிற்கு திரும்பி, நீரிலிருந்து எரிபொருளை பிரித்து வாகனத்தை இயக்கும் பிரத்யேக இயந்திரத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்ற கனவில் சரவணன் ( மாதவன்) எனும் விஞ்ஞானி தொடர்ந்து முயற்சிக்கிறார். இவருடைய கண்டுபிடிப்பு வெற்றியளித்தாலும் இதனை அரசாங்கம் அங்கீகரிக்க மறுப்பு தெரிவிக்கிறது.
மேலும் இது தொடர்பாக வேறு சில விடயங்களையும் சரவணிடமிருந்து அரசுத்துறை அதிகாரிகள் எதிர்பார்க்கிறார்கள். இந்த கண்டுபிடிப்பிற்காக சரவணன் தன் மனைவி குமுதா( நயன்தாரா) விடம் உணவகம் நடத்துவதற்கு நிதி உதவி வேண்டும் என பொய் சொல்லி, லட்சக்கணக்கில் கடன் வாங்கி அதனை முதலீடு செய்கிறார். ஒரு கட்டத்தில் கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுக்க, குமுதாவிற்கு தன் கணவன் பொய் சொல்லியது தெரியவர உடைந்து போகிறார். இது ஒரு கதை.
குமுதா சரவணன் ( நயன்தாரா) எனும் பெண்மணி, அர்ஜுனின் வகுப்பு தோழியாகவும், திருமணத்திற்குப் பிறகு குழந்தை பேற்றிற்காக ஏங்கும் பெண்மணியாகவும் வாழ்கிறார். தன் கணவரின் கண்டுபிடிப்புக்கு உதவி செய்தாலும், தன் லட்சியமான தாய்மை அடைய வேண்டும் என்பதற்காக சரவணனுக்கு நெருக்கடி தருகிறார். இது ஒரு கதை.
இந்த தருணத்தில் இந்தியா – பாகிஸ்தான் துடுப்பாட்டத்தின் பின்னணியில் ‘மேட்ச் பிக்சிங்’ எனும் சூதாட்டம் நடைபெறுகிறது. அதனை காவல்துறை கண்காணித்து நடைபெறாமல் தடுக்க போராடுகிறது.
இதன் பின்னணியில் நகர்வது தான் ‘டெஸ்ட்’ எனும் இப்படத்தின் கதை.
கதாபாத்திரம் 50 சதவீதம் நடிகர்களின் நடிப்பு 50 சதவீதம் என்ற கலவையில் உருவாகி இருக்கும் இப்படத்தின் திரைக்கதை பல இடங்களில் அழுத்தமாக, நேர்த்தியாக எழுதப்பட்டிருந்தாலும், முழுமை பெறவில்லை என்பதுதான் உண்மை.
மூன்று கதாபாத்திரங்களுக்கும் அவர்களின் கனவுகளில் வெற்றி பெறுவதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. அந்த அந்த வாய்ப்பை அந்த கதாபாத்திரங்கள் எப்படி பாவித்து கொள்கிறது? என்பதுதான் ரசிகர்களுக்காக அமைக்கப்பட்ட சுவாரசியம். ஆனால் இதில் பல இடங்களில் தடுமாற்றம் ஏற்படுகிறது. அர்ஜுனின் பிள்ளை கடத்தப்பட்ட பிறகு திரைக்கதையில் பரபரப்பு ஏற்படுகிறது. ஆனால் அதனை தொடர்ந்து நீடிக்க செய்யாமல் திசை மாறி பயணிக்கிறது திரைக்கதை.
அர்ஜுன் வெங்கட்ராமன் எனும் நட்சத்திர துடுப்பாட்ட வீரராக நடிகர் சித்தார்த் நடித்திருக்கிறார். அவருடைய சிறந்த பங்களிப்பை வழங்கி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை வழங்குகிறார்.
சரவணன் எனும் தன் கண்டுபிடிப்பிற்கான அங்கீகாரத்தை பெற போராடும் விஞ்ஞானி கதாபாத்திரத்தில் நடிகர் மாதவன் அற்புதமாக நடித்திருக்கிறார். உச்சகட்ட காட்சியில் இவர் வில்லனாக மாறுவது வழக்கமான கொமர்சல் மசாலா என்றாலும் அதிலும் அற்புதமாகவே நடித்திருக்கிறார்.
34 வயதை கடந்த திருமணமாகி பத்தாண்டுகளுக்கு பின்னரும் குழந்தை பாக்கியம் இல்லாத பெண்மணியாக குமுதா என்ற பெண்மணி கதாபாத்திரத்தில் நயன்தாரா இயல்பாக நடிக்க முயன்று தோல்வி அடைந்திருக்கிறார். அவரது சொந்த குரலில் பேசி இருந்தாலும், குழந்தை கடத்தப்பட்ட பிறகு அவருடைய நடிப்பில் மிகை தெரிகிறது.
இவர்களைக் கடந்து மீரா ஜாஸ்மின்- காளி வெங்கட் – ‘ஆடுகளம்’ முருகதாஸ்- ஆகியோர் இயக்குநரின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப நடித்திருக்கிறார்கள்.
இப்படத்திற்கு ஆக பெரிய பலம் ஒளிப்பதிவு தான். பின்னணி இசை கூட சில இடங்களில் தடுமாறுகிறது. சில இடங்களில் வியக்க வைக்கிறது.
இந்த திரைப்படம் படமாளிகையில் வெளியாகி இருந்தால் ரசிகர்களின் வரவேற்பு குறைவாகத்தான் இருந்திருக்கும். டிஜிட்டல் தளத்தில் வெளியிட்டிருப்பதால் ரசிகர்கள் இத்திரைப்படத்தை விரும்பிய தருணத்தில் பார்த்து ரசிக்கலாம்.
டெஸ்ட் – நாட் பெஸ்ட்.