தமிழ் திரையுலகின் கொமர்சல் இயக்குநரும் , நடிகருமான சுந்தர். சி – வடிவேலு இணைந்து நடித்திருக்கும் ‘கேங்கர்ஸ் ‘ திரைப்படத்தில் இடம் பெற்ற ‘குப்பன் ‘எனும் முதல் பாடலும் , பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டுள்ளது.
இயக்குநர் சுந்தர். சி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கேங்கர்ஸ் ‘ எனும் திரைப்படத்தில் சுந்தர் .சி ,வடிவேலு , கேத்ரின் தெரசா, வாணி போஜன் பக்ஸ் பகவதி பெருமாள், ஹரிஷ் பெராடி , மைம் கோபி, முனீஸ்காந்த் , ரெடின் கிங்ஸ்லி , தீபா சங்கர் , இளவரசு , சிங்கம் புலி , அருள்தாஸ் , ஜான் விஜய் , விச்சு விஸ்வநாத் , தளபதி தினேஷ், சித்ரா லக்ஷ்மணன் , முத்துகாளை உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஈ. கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சி. சத்யா இசையமைத்திருக்கிறார். கொமர்சல் என்டர்டெய்னராக தயாராகி வரும் இந்த திரைப்படத்தை அவ்னி சினிமேக்ஸ் மற்றும் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.
எதிர்வரும் 25 ஆம் திகதியன்று வெளியாகும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ சாமக்கோழி கூவியாச்சு..’ எனத் தொடங்கும் முதல் பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்த பாடலை பாடலாசிரியர் பா. விஜய் எழுத, பின்னணி பாடகிகள் மீனாட்சி இளையராஜா மற்றும் ஞானசுந்தரி ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள்.
துள்ளலிசை பாணியிலான இந்த பாடலுக்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்து வருகிறது. இதன் காரணமாக பாடல் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.