இலங்கை வல்வெட்டித் துறையைச் சேர்ந்த தர்மதாஸ் (சசிகுமார்), மனைவி வசந்தி (சிம்ரன்), மகன்கள் நிது, முள்ளி (மிதுன், கமலேஷ்) ஆகியோருடன் படகில்தப்பித்து ராமேஸ்வரம் வருகிறார். அங்கிருந்து சென்னை வரும் அவர்கள், வசந்தியின் சகோதரர் (யோகிபாபு) மூலம் புதிய வாழ்க்கையைத் தொடங்குகின்றனர். இலங்கை வாழ்வை மறந்து சந்தோஷத்துடன் வாழத் தொடங்கும்போது, ராமேஸ்வரத்தில் நடக்கும் ஒரு குண்டுவெடிப்பால், தர்மதாஸின் குடும்பத்தை போலீஸ் தேடுகிறது. இதில் அவர் குடும்பத்துக்கு என்ன ஆகிறது என்பது படத்தின் கதை.
இலங்கையிலிருந்து தமிழ்நாட்டுக்கு வரும் ஒரு குடும்பத்தின் நிலையை, இயல்பாக, அழகாகப் படமாக்கியிருக்கும் அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்க்கு ஒரு பூங்கொத்து. பிழைப்புத் தேடி இன்னொரு நாட்டுக்குச் சட்ட விரோதமாக வருவது என்பது கொடூரம். அப்படி வரும் குடும்பத்தின் கதைக் களத்தை, மெல்லிய நகைச்சுவையையும் மனித மனங்களையும் சமவிகிதத்தில் கலந்துபடமாக்கி இருப்பது ரசிக்க வைக்கிறது. கதையில் வரும் சின்ன சின்னக் கதாபாத்திரங்களுக்கு சிறிய பின் கதை வைத்திருப்பதும் கதையோட்டத்துக்கு உதவியிருக்கிறது.
படம் தொடங்கியதுமே, பார்வையாளர்களைக் கதைக்குள் இழுத்துச் செல்வது பிளஸ். ராமேஸ்வரம் வரும் நாயகனின் குடும்பத்துக்கு என்ன ஆகும், அங்கிருந்து சென்னை வந்த பின் வேலை கிடைக்குமா, அக்கம் பக்கத்தினரிடம் மாட்டிக் கொள்வார்களோ? என்கிற பதைபதைப்பு தொற்றிக்கொள்கிறது. ஆனால், புலம்பெயர்ந்து வந்தாலும் மனிதர்களின் அன்பைச் சம்பாதிக்கலாம் என்கிற காட்சிகளைத் தொய்வே இல்லாமல் இயக்குநர் காட்சிப்படுத்தி அப்ளாஸ் பெறுகிறார்.மனைவி – கணவன், தந்தை – மகன், அக்கம்பக்கத்தினருடன் சினேகமான உறவு என்று நாயகனின் குடும்பத்துடன் எல்லோரும் டிராவல் செய்வது படத்தைத் தூக்கி நிறுத்துகிறது. ‘இந்தத் தமிழ் பேசுவதுதான் பிரச்சினையா, இல்லை நாங்க தமிழ் பேசுவதே பிரச்சினையா?’ என்று போகிற போக்கில் வரும் அரசியல் வசனங்களும், ஈழத் தமிழை தெருவாசிகள் கற்றுக் கொள்வது போன்ற காட்சிகளும் ரசிக்க வைக்கின்றன.
போலீஸில் மனிதநேய மிக்கவர்கள் இருக்கிறார்கள் என்பதற்கான காட்சிகளும் படத்தில் உள்ளது. ஆனால், அண்டை நாட்டிலிருந்து வரும் குடும்பத்தை எந்த விசாரணையும் இல்லாமல் போலீஸ் அனுமதிப்பது எப்படி? அதேபோல போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டிலேயே தைரியமாகக் குடியிருப்பது போன்ற காட்சிகள் நெருடல்கள். என்றாலும் நேர்த்தியான திரைக்கதை அதை மறக்கச் செய்துவிடுகிறது. படத்தின் நாயகன் சசிகுமார். இரக்கம், உதவும் குணம், குடும்பத்தைக் காப்பாற்றப் போராடும் பாசமுள்ள கணவன், தந்தை என அழகாக நடித்திருக்கிறார். மனைவியாக வரும் சிம்ரன் படத்துக்குப் பலம். இருவரும் மகிழ்ச்சிகரமான குடும்பத்தைக் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார்கள். யோகிபாபு டைமிங் காமெடியில் சிரிக்க வைக்கிறார். இளைய மகனாக வரும் சிறுவன் கமலேஷ், சிரிப்பு வெடியாக வெளுத்து வாங்கியிருக்கிறார். மூத்த மகன் மிதுன் பாந்தமாக நடித்திருக்கிறார்.
எம்.எஸ்.பாஸ்கர், இளங்கோ குமரவேல், பகவதி, ரமேஷ் திலக், ஸ்ரீஜா ரவி, ராம்குமார் பிரசன்னா ஆகியோர் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள். ஷான் ரோல்டனின் பாடல்களும் பின்னணி இசையும் படத்துக்குப் பலம். அரவிந்த் விஸ்வநாதனின் கேமராவும், பரத் விக்ரமனின் படத்தொகுப்பும் கச்சிதம்.