தமிழ் சினிமாவில் தணிக்கை சான்றிதழ் முறையில் மாற்றம் ஏற்பட்ட பிறகும் பெரியவர்கள் பார்த்து ரசிக்கும் திரைப்படங்களை தான் எம்முடைய பிள்ளைகளும் பார்த்து ரசிக்க வேண்டியதாக இருக்கிறது. அவர்களுக்கென பிரத்யேக திரைப்படங்கள் வெளியாவதில்லை.
ஆண்டிற்கு இரண்டு அல்லது மூன்று திரைப்படங்கள் தான் வெளியாகிறது. இந்நிலையில் இந்த குறையை நிவர்த்தி செய்வதற்காக குழந்தைகள் ரசிக்கும் வகையில் ‘மரகத மலை ‘எனும் திரைப்படம் தயாராகிறது.
அறிமுக இயக்குநர் எஸ். லதா இயக்கத்தில் உருவாகி வரும் ‘ மரகத மலை’ எனும் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரங்கள் சஷாந்த், அரிமா , மஹித்ரா ,கலைக்கோ ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
இவர்களுடன் சந்தோஷ் பிரதாப் , தீப்ஷிகா, தம்பி ராமையா, ஜெகன், சம்பத் ராம், வம்சி ஆகிய பிரபல நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். பி. ஜி. முத்தையா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எல். வி. முத்து கணேஷ் இசையமைத்திருக்கிறார். ஃபெண்டஸி ஜேனரிலான இந்த திரைப்படத்தை எல். ஜி. மூவிஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர் எஸ் . லதா தயாரித்திருக்கிறார்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” குழந்தைகளை கவரும் வகையில் பதினெட்டாம் நூற்றாண்டில் நடைபெறுவது போல் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்த திரைக்கதையில் புலி, யானை , கரடி, டிராகன், கொரில்லா, பாம்பு , குதிரை என பிள்ளைகள் விரும்பும் வன விலங்குகளும் கதாபாத்திரங்களாக இடம் பிடித்திருக்கிறது. இப்படத்திற்கான கிறாபிக்ஸ் வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை இம்மாதம் திரையிட திட்டமிட்டிருக்கிறோம்” என்றார்.