சிறந்த நடிப்பிற்காக தேசிய விருதினை வென்ற நடிகை கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘ரகு தாத்தா’ எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இயக்குநர் சுமன் குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ரகு தாத்தா’ எனும் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ், எம். எஸ். பாஸ்கர், ரவீந்திர விஜய், தேவதர்ஷினி, ஜெயக்குமார், ஆனந்த் சாமி, ராஜேஷ் பாலச்சந்திரன், இஸ்மத் பானு, ஆதிரா பாண்டி லக்ஷ்மி, முகேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
யாமினி மற்றும் சிவக்குமார் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தை ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் தயாரித்திருக்கிறார்.
அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்காக காத்திருந்த இந்த திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அந்த வகையில் இந்த திரைப்படம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகைகளில் வெளியாகிறது. இதற்காக படக்குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்திருக்கிறார்கள்.
இதனிடையே ஓகஸ்ட் 15 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகரான அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘புஷ்பா 2- தி ரூல்’ எனும் படமும் வெளியாகிறது.
இந்தத் திரைப்படத்துடன் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் ‘ரகு தாத்தா” எனும் திரைப்படமும் வெளியாவதாலும், ‘புஷ்பா’ படத்திற்காக அல்லு அர்ஜுன் தேசிய விருதினை பெற்றிருக்கிறார் என்பதும், ‘நடிகையர் திலகம்’ படத்திற்காக கீர்த்தி சுரேஷ் தேசிய விருதினை பெற்றிருக்கிறார் என்பதும் கவனம் ஈர்த்திருப்பதால்… இந்த இரண்டு தேசிய விருது பெற்ற நட்சத்திரங்களின் திரைப்படங்கள் ஒரே திகதியில் வெளியாவதால் ரசிகர்களிடையே பெரும் உற்சாகம் ஏற்பட்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.